மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

சினிமாவை வேட்டையாடும் அமானுஷ்யம்: உடைப்பது யார்?

சினிமாவை வேட்டையாடும் அமானுஷ்யம்: உடைப்பது யார்?

அலறல் மிகுந்த அமைதியையும், கட்டுப்படுத்த முடியாத கதறல்களையும் தனக்குள்ளே அடக்கிக்கொண்டு சூனியமாகக் காட்சி கொடுக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, சினிமா துறையினரின் வாசத்தையும் கடந்த 48 மணி நேரங்களில் சுவாசித்தது. காலம் முழுக்க சினிமா நெடியைச் சுவாசிக்க வேண்டுமென முடிவெடுத்து சினிமாவுக்குள் நுழைந்த மூன்று பேரால் அந்த வாசத்தைச் சுவாசிக்க முடியவில்லை. மற்ற 12 பேர் இந்த வாசத்தைப் பெறமுடியாமல், செயற்கை சுவாசம் ஊட்டப்பட்டு மருத்துவமனை கட்டில்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு எல்லாவிதமான நம்பிக்கையையும் கொடுப்பதற்கு, அவர்களது துறை சார்ந்த நண்பர்கள் பலரும் அந்த மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கொண்டிருக்கின்றனர். பிழைத்து விடுவார்கள் எனக் கூறப்பட்ட பிறகும் அவர்கள் அங்கேயே இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உள்ளே நிறைந்திருக்கும் ஒவ்வொரு கட்டிலிலும், அங்கு படுத்திருப்பவர்களுக்குப் பதிலாக, தான் இருந்திருக்கக் கூடும் என்ற மனநிலையே அவர்களை அந்த மருத்துவமனையிலிருந்து நகரவிடவில்லை. கமல் சொன்னாரே, ‘கொஞ்சம் நகர்ந்து விழுந்திருந்தாலும் இங்கு எனக்குப் பதில், வேற யாராவது பேசிக்கிட்டு இருந்திருப்பாங்க. நான் உள்ளே படுத்துக்கிட்டு இருந்திருப்பேன்’ என, அதுவே அவர்களை அங்கு வைத்திருந்தது. எப்படி அந்த ஸ்பாட்டிலிருந்து அடிபடாமல் தப்பித்தோம் என்பதை மற்றவர்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கும் சினிமா துறையைச் சேர்ந்த அந்தத் தொழிலாளர்களிடம் கேட்கும்போது அவர்கள் சொல்லும் தகவல்கள் திகில் நிறைந்ததாக இருக்கின்றன.

EVP ஃபிலிம் சிட்டி என்றழைக்கப்படும் பூந்தமல்லியை நெருங்கிய அந்த ஷூட்டிங் ஸ்பாட், பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்குப் பெயர்பெற்றது. எனவே, அங்கு நடைபெறும் ஷூட்டிங்குக்குச் சென்றால் இரண்டு கால்ஷூட்களில்கூட தொடர்ந்து வேலை செய்யலாம். ஒரு மாதத்துக்குள்ளாகவே இரண்டு மடங்கு மாதச் சம்பளத்தையும் பெறலாம். ஆனாலும், இரவு கால்ஷூட் என்பது எப்போதும் யோசனைக்குள்ளாகும் ஒன்றுதான் என்கின்றனர் அங்கு பணிபுரிபவர்கள். பெயரை வெளியிட மாட்டீர்கள் என்றால் நாங்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம் என்று கூறியபின் தனியே அழைத்துச்சென்று EVP எனும் பேய் நகரம் குறித்த தகவல்களைக் கூறினர்.

“பூந்தமல்லிக்குப் பக்கத்துல இருக்க பழஞ்சூர் பாப்பான்சத்திரம்தான் இந்த ஸ்பாட் இருக்கும் ஊர். 2012இல் இந்த தீம் பார்க் கட்டி முடிச்சாங்க. கவர்ன்மென்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சு தீம் பார்க் கட்டியிருக்கிறதா கம்ப்ளைன்ட் கொடுத்ததால ஸ்டார்ட் பண்ண சீக்கிரத்திலேயே மூடிட்டாங்க. அதுக்கப்பறம் எல்லா பிரச்சினையையும் சால்வ் பண்ணி தீம் பார்க் ஓப்பன் பண்ணாங்க. 2012 ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி சென்னை சின்மயா நகர்ல இருந்து வந்த ஒரு பொண்ணு ராட்டினத்துல இருந்து தவறி விழுந்து கால் எலும்பு உடைஞ்சுப் போச்சு. அதை அப்படியே விட்டுட்டாங்க. அப்புறம் செப்டம்பர் மாசம், தண்டையார்பேட்டைல இருந்து வந்த 16 வயசு பையன் சர்க்கஸ்ல சறுக்கி வந்தப்ப தவறி கீழே விழுந்தான். ஆனால், அதிர்ஷ்டவசமா உயிருக்கு ஒண்ணும் ஆகல. இதையும் பூசி மொழுகிட்டாங்க. அதே வருஷம் அக்டோபர் மாசம் 1ஆம் தேதி நாகாலாந்துல இருந்து வந்த அபியா மேக்ன்னு 25 வயசுப் பொண்ணு, ஏர் ஹோஸ்டஸா வேலை பாத்தாங்க போல. அவங்க ஆக்டோபஸ் ராட்டினத்துல இருந்து தவறி விழுந்து செத்துட்டாங்க. அப்பதான் இந்த தீம் பார்க்குக்கு ரொம்ப பிரச்சினை வந்தது. இந்த இடத்துக்குச் சொந்தக்காரரான பெருமாளுக்கு இந்தத் தொழிலும் நஷ்டமாச்சு. அவர் ஏதோ ஜோசியம் பார்த்து இது சரிபடாதுன்னு மூடிட்டார். ஆனால், இந்த இடத்தை ஷூட்டிங்குக்கு நிறைய பேர் கேட்டதும். அவர், சும்மா கிடக்குற இடத்துக்கு ஏதோ வருமானம் வரட்டும்னு கொடுத்தார். ஆனால், ஷூட்டிங் அக்ரிமென்ட்லயே, இந்த இடத்துல ஏதாவது உயிர் பலி நடந்தா அதுக்கு ஓனர் பொறுப்பில்லைன்னு எழுதி கையெழுத்து வாங்கிக்குவாராம்.

அப்படிதான் முதன்முதலா சினிமா சைட்ல இருந்து முதல் தடவை காலா ஷூட்டிங்ல ஒருத்தர் இறந்து போனார். நார்த்ல இருந்து வந்த அந்தப் பையன் பேர் மைக்கேல். அவன் எப்பவுமே நான் எங்கே, எப்படி இருக்க வேண்டியவன். உங்களுக்கு எடுபுடி வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன்னு பொலம்பிக்கிட்டே இருப்பான். நடிகைகளுக்கு அசிஸ்டென்ட்டா இருக்கணும்ன்றது அவனோட ஆசை. ஆனால், அவனை எடுபுடியா தான் வேலைக்குச் சேர்த்தாங்க. அப்படி பொலம்பிக்கிட்டே ஒரு டேபிளைத் தூக்கிக்கிட்டு போய் ஒயர் மேல வெச்சப்ப தான் கரண்ட் ஷாக் அடிச்சு செத்துப்போய்ட்டான். எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நல்லா துறுதுறுன்னு ஏதாவது பேசிக்கிட்டே இருப்பான். இந்த டெத் நடந்த கொஞ்ச நாள்லயே தனியார் தொலைக்காட்சியோட ஒரு ரியாலிட்டி ஷோ ஸ்டார்ட் பண்ணாங்க. நடிகர்கள், நடிகைகள்னு நிறைய பேரை வீட்டுக்குள்ள அடைச்சு வெச்சு நடத்தப்பட்ட அந்த ஷோ நல்லா போய்க்கிட்டு இருந்தப்ப, கடைசில அதுல இருந்த ஒரு நடிகை தற்கொலை முயற்சி செய்துக்கிட்டாங்க. இதுக்குக் காரணம் மைக்கலோட ஆவிதான்னு சினிமா ஃபீல்டுல வேலை செய்ற எல்லாரும் பேசிக்க ஸ்டார்ட் பண்ணாங்க. இதை சொல்லியே பல பேர் நைட் ஷூட்டிங் நடக்கும்போது, எங்கேயும் தனியா போகவே பயப்படுவாங்க. அப்படி மத்தவங்க சொல்றத கேக்காம அங்கேயே தங்கியிருந்து வேலை செய்த ஒரு பையன் இறந்து போனப்ப, அதை ஒரு சூசைட் கேஸ் மாதிரி முடிச்சிட்டாங்க. அவன் எந்த ஷூட்டிங் கம்பெனிலயும் வேலை செய்யல. இது அங்கே இறந்தவங்களோட ஆவியாலதான் நடக்குதுன்னு பேசிக்கிட்டதை இன்னும் அதிகமாக்குச்சு.

2017இல் இதெல்லாம் முடிஞ்சதும் 2018ஆம் வருஷம் எதுவும் நடக்காம இருந்ததால, இதையெல்லாம் மறந்துட்டு எல்லாரும் வேலையை மட்டும் பார்த்தாங்க. ஆனால், ஏப்ரல் மாசம் பிகில் ஷூட்டிங் ஸ்பாட்ல, கிரேன்ல கட்டியிருந்த ஃபோக்கஸ் லைட் விழுந்து செல்வராஜ்னு ஒருத்தருக்கு அடிபட்டுச்சு. அப்ப திரும்பவும் இந்தப் பேச்சு வந்தது. பேயாலதான் இதெல்லாம் நடக்குதுன்னு சொன்னவங்களை, செல்வராஜ் மட்டும் பொழச்சு வந்தா இனி இப்படி பேசலைன்னு சொன்னாங்க. ஆனால், ஒரு மாசத்துலயே செல்வராஜ் இறந்து போயிட்டார். அவருக்கு ஏதோ பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணாங்க. அவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் மாதிரியே இருப்பார். ஆள் கணக்குக்காகவும், இட்லி கடை வெச்சிருக்கும் அவர் குடும்பத்தோட உதவிக்காகவும் அவரை சும்மாதான் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. அதனால பெரிய அளவுல அவருக்காக யாரும் பேசல. இதுக்காக செல்வராஜ் பழி வாங்குவான் பாருன்னுகூட நிறைய பேர் பேசினாங்க. யாருக்கும் எதுவும் ஆகக்கூடாதுன்னு சினிமா ஃபீல்டு முழுக்கவும் ஒரு கவனம் இருந்தது. புரொடக்‌ஷன் மேனேஜர்கிட்ட திட்டு வாங்கினாலும் சரி, வேலையே போனாலும் சரி பத்திரமா வேலை செய்யுங்கன்னு எல்லார்கிட்டவும் சொல்லி வெச்சிருந்தோம். இதை மறக்குறதுக்குள்ள, அந்த ரியாலிட்டி ஷோ திரும்ப ஸ்டார்ட் ஆச்சு. அந்த டீம் வெளியில இருந்து கூட்டிக்கிட்டு வந்த ஏ.சி மெக்கானிக் ஒருத்தர் ரெண்டாவது மாடில இருந்து விழுந்து இறந்துபோனார். கமல் சார் ரொம்ப கஷ்டப்பட்டார். இனி இப்படி நடக்கக் கூடாதுன்னு அந்த ஷோ நடத்தினவங்களைக் கூப்பிட்டு சொன்னார். எல்லா சேஃப்டி எக்யூப்மென்ட்டும் கொடுக்கணும்னு கட்-அண்ட்-ரைட்டா சொன்னார். யூனிட் ஆளுங்களுக்கும், என்ன வேணுமோ கேட்டு வேலை செய்யுங்கய்யா. அவங்க கொடுக்கலைன்னா நான் தர்றேன்னு சொல்லியிருந்தார். இதனால, நாங்க ரொம்பவே கவனமா வேலை செய்ய ஸ்டார்ட் பண்ணோம். 2019 முழுக்கவும் யாரும் செத்துப்போகக் கூடாதுன்னு ஒருத்தருக்கொருத்தர் உதவியா வேலை செய்துக்கிட்டோம். ஆனாலும், அந்த ரியாலிட்டி ஷோ நடத்துன மூணாவது சீசன்ல, திரும்பவும் ஒரு நடிகை கையை அறுத்துக்கிட்டு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாங்க. அதை நம்மளால போய் தடுக்கவா முடியும்னு எல்லாரும் விட்டுட்டாங்க. ஆனால், 2020ஆம் வருஷத்தோட தொடக்கத்துலயே இந்தியன் 2 ஷூட்டிங்ல இப்படி ஆகியிருக்கு. இதை யாரும் எதிர்பார்க்கலை என்கிறதுதான் உண்மை. இவ்வளவு விஷயத்தையும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் கலெக்ட் பண்ணி ஒரு ஸ்டோரி பண்ணி வெச்சிருந்தார். அதை ஒரு புரொடியூசர்கிட்ட சொன்னப்ப. இந்தப் படத்தை சுந்தர்.சி எடுத்தா நல்லா இருக்கும். நீ வேணும்னா அவர்கிட்ட கதையைக் குடுத்துட்டு அசிஸ்டென்ட்டா வேலை செய்றியான்னு கேட்டார். அவர், எனக்கு சினிமாவே வேணாம்னு ஊருக்குக் கிளம்பிப் போய்ட்டார். ஒருவேளை இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் கிளம்பி வந்தாலும் வருவார். இதை அவர் சினிமாவா எப்படி பண்ணாலும், நடந்த விஷயங்கள் அத்தனையும் உண்மைதான். அதிக உயரத்துல ஏதாவது ஒரு செட் போட்டாலே, கண்டிப்பா உயிர் பலி வாங்கிடுது. இது அந்த ஏர் ஹோஸ்டஸ் பொண்ணோட ஆவி தான்னு நிறைய பேர் நம்புறாங்க” என்று சொல்லிவிட்டு. நான்தான் இதையெல்லாம் சொன்னேன்னு என் பெயரைப் போட்டுறாதீங்க சார் என்று ஒரு வேண்டுகோளும் வைத்தார் அந்த நபர்.

இவர் சொல்வதையெல்லாம் நம்புவதற்கு முன்பாக, ஸ்பாட்டில் காலையிலிருந்து இருந்தவர்களின் மனநிலையும் கருத்தும் முக்கியத் தேவையாக இருந்தது. பல மணிநேர அவரது கருத்துகளைக் கேட்டதனால் ஏற்பட்ட நம்பிக்கை, கமல்ஹாசனைப் போலவே மயிரிழையில் விபத்திலிருந்து தப்பித்த ஒருவருடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொடுக்க அவரை உந்தியது. மருத்துவமனையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த ஒருவரிடம், மிகவும் தெரிந்தவர் என அறிமுகப்படுத்தி வைத்தார். காத்திருக்கச் சொல்லிவிட்டு ஒன்றரை மணிநேரம் கழித்து வந்தவர், நேரடியாகச் சில விஷயங்களைக் கூறினார்.

“கமல் சார் மேல இருக்கிற நம்பிக்கையால மட்டும்தான் சார் இன்னும் சும்மா இருக்கோம். சாயங்காலமே அந்த கிரேன் ஒரு பக்கமா சாய்ஞ்சுது சார். அப்பவே எல்லாரும் கத்தினாங்க. கமல் சார்கூட என்ன ஆச்சுன்னு பதறிப்போனார். ஆனால், ஒண்ணுமில்லைன்னு சமாதானப்படுத்திட்டு நைட் 9 மணிக்குத் திரும்பவும் அதே தப்பை செஞ்சு இத்தனை பேர் வாழ்க்கையை நாசமாக்கியிருக்காங்க” என்று ஆதங்கத்தில் ஆர்ப்பரித்தார்.

ஆக, இந்தியன்-2 ஷூட்டிங் ஸ்பாட்டில் 19ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற்ற விபத்துக்கு முன்பே ஒருமுறை இந்த விபத்துக்கான டீசர் நிகழ்ந்திருக்கிறது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் செய்யப்பட்ட தவறுகளினாலேயே, சில மணி நேரத்தில் மூன்று உயிர்களைப் பலி கொண்டிருக்கிறது அந்த கிரேன். இப்படிப்பட்ட மனித தவறுகளினால் நடைபெறும் விபத்துகளை, உணர்வுகளைக் கடந்து பார்க்க முடியாத சிலர் அவற்றுக்கு பேய் – ஆவி – ஆத்மா - அமானுஷ்யம் எனப் பெயர் வைத்துவிடுகின்றனர். அப்படிப் பார்க்க முடிந்த சிலரான கமல்ஹாசனைப் போன்றவர்கள், படத்தின் டீமில் ஒருவராக மாறிவிட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு நியாயத்தைவிட பணத் தேவையே அடுத்தகட்ட வாழ்வில் முக்கியம் என்பதாகக் கொண்டு பண உதவிகளைப் பெற்றுத் தருவதை முதல் வேலையாகச் செய்கின்றனர். ரூபாய் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் படமெடுக்கும்போது ஷூட்டிங்குக்குத் தேவையான தகுதியுடையவர்களை வேலைக்கு வைக்கவேண்டியதும், அவர்களுக்குத் தேவையான பொருட்களைத் தடையின்றி தருவதுமே உயிர்ப்பலிகளை முற்றிலுமாகத் தவிர்த்து ஆவிகளை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேற்றும். நன்றாகப் பேசிப் பழகி, ஒருவருக்கொருவர் துணையாகப் பணியாற்றும் அந்த நபர் உயிருடன் இல்லை என்பதை அறியும்போது வாழ்வின் மீதான நம்பிக்கை ஆட்டம் காணும். ஒன்றின் மீதான நம்பிக்கை குறையும்போது, இன்னொன்றின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அப்படியே வாழ்வதற்கு கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகமாக வைத்திருக்கும் மனிதர்களுக்கு மரணத்தைக் காணும்போது பேய், பூதம், சாத்தான் ஆகியவற்றின் மீதான நம்பிக்கை அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை. இவற்றை உடைப்பதற்கு, என்ன நடந்தது என்பதை வெளிப்படையாகக் கூறாமல் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் முறையை ஒழித்துவிட்டு, முறையான விசாரணைக்கு ஸ்பாட்டில் இருந்த அத்தனை பேரையும் உட்படுத்த வேண்டும். அதுதான் நீதியைப் பெற்றுத்தரும். நீதிக்கு முன்னால் ஓடிவரும் பணம் எப்போதும் ஆபத்தானது.

-சிவா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon