மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சொல்லப்படாத குற்றமும், சாவைத் தாண்டிய பயமும்: வால்டர் ட்ரெயிலர்!

சொல்லப்படாத குற்றமும், சாவைத் தாண்டிய பயமும்: வால்டர் ட்ரெயிலர்!

சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள வால்டர் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபு திலக் தயாரித்துள்ள திரைப்படம் வால்டர். அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் பெரும் ஆதரவைப் பெற்று பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் குற்ற விசாரணைத் திரைப்படமாக அமைந்துள்ள இதில் கும்பகோணம் ஏ.எஸ்.பி. வால்டராக சிபிராஜ் நடித்துள்ளார். இந்தியாவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ட்ரெயிலர் ஆரம்பமாகும்போதே, “ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இந்தியாவில் நான்கு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் தமிழ்நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது.” என்ற புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

திகிலூட்டும் இசை, பரபரப்பான சண்டைக் காட்சிகள் என்று வால்டர் படத்தின் ட்ரெயிலர் கவனம் ஈர்த்துள்ளது. டீசரில் இடம்பெற்ற ‘ஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு’ என்ற வசனம் கவனம் ஈர்த்தது. அதே போன்று தற்போது ட்ரெயிலரில் வரும் ‘உன் நெத்தியில என் கன்-அ வைக்கும் போது சாவத் தாண்டி ஒரு பயம் தெரியும் பாரு’ என்ற வசனமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்தப்படத்தில் ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon