நியூசிலாந்தில் ஒரு சம்பவம்: நிகழ்த்தப்போவது யார்?

entertainment

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரத்திலுள்ள பாசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்தது. நம்பிக்கையுடன் விளையாடிவந்த மயங்க் அகர்வாலின் விக்கெட்டையும் கடைசியில் இழந்துவிட்டது.

பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க நான்கு ஓவர்கள் வரை ஆட்டம் நன்றாகப் போனது. பிரித்வி ஷா-வின் விக்கெட்டை நான்காவது ஓவரில் டிம் சௌதி வீழ்த்திய பிறகு, அடுத்ததாக வந்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்துகள் விளையாடி 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். தடுப்பாட்டத்தில் சிறந்தவரான புஜாரா மிகப்பெரும் பலமாக பார்க்கப்பட்ட நிலையில், 15ஆவது ஓவரில் கைல் ஜேமிசன் பந்தில் அவுட் ஆனார். கேப்டனாக அணியின் மானம் காக்கக் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 7 பந்துகளில் இரண்டு ரன்களுடன் நடையைக் கட்டினார். அடுத்து விழும் ஒவ்வொரு விக்கெட்டும் இந்திய அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்பதால் மயங்க் அகர்வால் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் மிகவும் நிதானமாக விளையாடி வந்தனர். ஆனால், மிடில் லெக்கில் வந்த பந்தினை அவசரப்பட்டு திருப்பி அடித்ததால் மயங்க் அகர்வாலின் கேட்சை கைல் ஜேமிசன் பிடித்துவிட்டார்.

நிதானமான ஆட்டம் மட்டுமே இந்தியாவுக்கு மிக முக்கியமானது. நியூசிலாந்தின் மைதானத்தைப் பொறுத்தவரையில், மிகவும் சமதளமாக அவை தயார் செய்யப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு நாட்கள் பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த பிட்ச், அடுத்த மூன்று நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக மாறும். எனவே, முதல் இன்னிங்ஸில் எடுக்கும் ஒவ்வொரு ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் கைகொடுக்கும். முதல் இன்னிங்ஸில் விளையாடும் பேட்ஸ்மேன்களை சிதறடிக்கவே இரு அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகளவில் அணியில் சேர்த்திருக்கின்றன.

ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி ஆகியோர் இந்தப் போட்டியில் இந்திய அணிக்குக் கொடுக்கும் பங்களிப்பு அவர்களது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு கூடுதல் போனஸாக அமையும். 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்திருக்கும் இந்திய அணி, 96 ரன்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *