மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

படத்தைப் போட்டுக் காட்டு, கைல துட்டு: இது டி.ஆர் கலகம்!

படத்தைப் போட்டுக் காட்டு, கைல துட்டு: இது டி.ஆர் கலகம்!

தர்பார் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று (பிப்ரவரி 20) நடைபெற்றது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், விநியோகஸ்தர்களைக் காப்பாற்றவும் சினிமாவை வலுவானதாக மாற்றவும் தேவைப்படுவதாகக் கூறி ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நடிகர் ரஜினிகாந்த் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார். உலகெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  தர்பார், வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், தர்பார் திரைப்படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான் தர்பார் விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் 100 நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முக்கியத் தீர்மானமாக, எம்ஜி( Minimum Guarantee) முறையில் படத்தை யார் வாங்குகிறார்களோ, நஷ்டமாக லாபமாக இருந்தாலும் அது விநியோகஸ்தர்கள் அல்லது வாங்குபவர்களைச் சார்ந்தது. அதேசமயம், எம்ஜி அடிப்படையில் வாங்கக்கூடிய படங்களை வாங்குவதற்கு முன்னே பார்ப்பதற்கும் அனுமதிக்க வேண்டும். அதைப் பார்த்த பின்புதான் வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை முடிவு செய்து வாங்கிவிட்டால், அந்த நஷ்டத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் பெரிய பட்ஜெட்டில் எடுக்க கூடிய படங்கள், அல்லது ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் நடிக்க கூடிய படங்கள் பாதிக்கப்படக்கூடும் என்கின்றனர் திரையுலகினர். அதேநேரம், ஒரு படம் தயாரானதும் தயாரிப்பாளர், நடிகர், நடிகரின் உறவினர்கள், இயக்குநரின் நண்பர்கள் என எத்தனையோ பேருக்கு சினிமா உலகம் திரையிட்டுக் காட்டுகிறது. அதையே அந்தப் படத்தை வாங்கி, வெளியிட்டு வெற்றிபெற வைக்கும் விநியோகஸ்தர்களுக்குத் திரையிட்டுக் காட்டுவதில் என்ன பிரச்சினை வந்துவிடுகிறது என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கபட்ட தீர்மானங்களை, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்  இன்று (21.02.2020) அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-சிவா

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon