மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

லோக்கல் கேங்ஸ்டர் தனுஷ்: யார் அந்த யூதாஸ் நண்பன்?

லோக்கல் கேங்ஸ்டர் தனுஷ்:  யார் அந்த யூதாஸ் நண்பன்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ‘ஜகமே தந்திரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தப்படத்திற்கு ‘சுருளி’ என்றும் ‘சம்பவம்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தனுஷ் நடிக்கும் 40-ஆவது திரைப்படமான இதற்கு ஜகமே தந்திரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெறும் ‘ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்’ பாடலின் வரியை தனுஷ் படத்திற்கு பெயராக வைத்துள்ளனர். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் மற்றும் மதுரையில் நடைபெற்றுவந்தது. ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரிலும் லண்டனை மையப்படுத்தும் விதமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே பெரிய மீசை, கிராமத்து வேடம் என்று மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் தனுஷின் சில புகைப்படங்கள் வெளியான நிலையில் இது ஒரு கேங்ஸ்டர் கதையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டர், ‘இது வேற லெவல் கேங்ஸ்டர் கதை’ என்பதை பல குறிப்புகளால் உணர்த்தி அனைவரையும் கவர்ந்துள்ளது. போஸ்டரில் இடம்பெறும் கலையரசன், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ போன்றோர் மேற்கத்திய உடையில் ஸ்டைலாகத் தோன்ற பட்டுவேட்டி, கையில் துப்பாக்கிகள், முதுகில் மாட்டி வைத்த ஏ.கே 47 என்று லண்டனில் ஒரு லோக்கல் கேங்ஸ்டர் என்பதாக தனுஷ் தோற்றமளிக்கிறார்.

மோஷன் போஸ்டரில் அனைவரையும் கவனிக்க வைத்த மற்றொரு விஷயம், லாஸ்ட் சப்பரை நினைவு படுத்தும் விதமான ஒரு புகைப்படம். இயேசு கிறிஸ்து கழுமரத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னதாக தனது நண்பர்களுடன் விருந்து உண்டதை குறிப்பிடும் ஓவியத்தைப் போன்று, ஒரு புகைப்படம் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. தனுஷ் தோட்டா தெறிக்கும் துப்பாக்கியுடன் நடுவில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி ஒரு புறம் வெளிநாட்டவர்களும் மறுபுறம் தனுஷின் நண்பர்களும் அமர்ந்துள்ளனர்.

இறுதி விருந்தில் இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யூதாஸ், இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தார் என்று கிறிஸ்தவ மதக் கதைகள் கூறுகிறது. அதே விதத்தில் இந்தப்புகைப்படமும் அமைந்துள்ளதால், நண்பனின் துரோகமும், துரோகத்தின் பழிவாங்கலுமாக ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் அமையும் எனத் தெரிகிறது. லோக்கல் கெட்டப்பில் இருக்கும் இந்த லண்டன் கேங்ஸ்டரின் யூதாஸ் யார்? இல்லை யூதாஸே தனுஷ் தானா என்பதாகப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளிவரவிருக்கும் இந்தத் திரைப்படம் மே மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜகத்தையே புரட்டிப்போடவரும் தனுஷின் தந்திரங்களைக் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon