மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

இது மாஃபியாவின் மாஸ்டர் பிளான்!

இது மாஃபியாவின் மாஸ்டர் பிளான்!

அருண் விஜய் கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஃபியா. இந்தப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி நேற்று(பிப்ரவரி 18) வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நடிகர் அருண் விஜய் சினிமா உலகிற்குள் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்துள்ளது. ஹீரோவாக திரை வாழ்க்கையை ஆரம்பித்த அருண் விஜய் செகண்ட் ஹீரோவாகவும், வில்லனாகவும் ஒரு ரவுண்ட் வலம் வந்து மீண்டும் இப்போது மிரட்டும் ஹீரோவாக மாறியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா திரைப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக மாஃபியாவில் என்ன இருக்கிறது? என்ற தலைப்பில் நமது மின்னம்பம் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. போலீஸ் அதிகாரியான அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட தனது டீம் மெம்பர்களுடன் இணைந்து யாரையோ தேடிச் செல்வதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. துப்பாக்கி திரைப்படத்தில் விஜய் தனது நண்பர்களுடன் தீவிரவாதிகளைத் தேடி செல்வது போன்று ஒரு பக்கா பிளானுடன் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கிறார்கள்.

இந்த வீடியோவில் முகத்தில் கறுப்பு துணியைக் கட்டியிருக்கும் அருண் விஜய்யின் மிரட்டும் கண்கள், ப்ரியா பவானி சங்கரின் திடமான பேச்சு என அனைத்தும் கவரும்படியாக உள்ளது. காட்சிகளின் நிறங்களும், பின்னணி இசையும் இணைந்து எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon