மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

புர்கா சர்ச்சை: சகோதரிக்கு ஆதரவாக ரஹ்மான் மகன்!

புர்கா சர்ச்சை: சகோதரிக்கு ஆதரவாக ரஹ்மான் மகன்!

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது, என் உடை ஏன் உங்கள் கண்களை உறுத்துகிறது” என்று தன்னுடைய புர்கா குறித்து கேள்வியெழுப்பிய பெங்காலிய எழுத்தாளரான டஸ்லிமா நஸ்ரினுக்கு பதில் கேள்வி கேட்டு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியது. அதன்பின் தனது சகோதரிக்கு ஆதரவாக ஒரு ஃபோட்டோவைப் பகிர்ந்து தனது பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன்.

ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் வென்று பத்து வருடங்கள் நிறைவடைந்த விழா கடந்த 2019ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிந்துகொண்டு மேடையேறி தனது தந்தையிடம் சில கேள்விகளைக் கேட்டார். அந்தப் படத்தைப் பகிர்ந்து ‘கல்வியிலும், புகழிலும் விண்ணைத் தொட்டவர்கள் கூட இதுபோன்ற பிற்போக்குத்தனமான காரியங்களை தொடர்ந்து செய்வது ஒருவித மனப்புழுக்கத்தைக் கொடுக்கிறது’ என பெங்காலிய எழுத்தாளரான டஸ்லிமா நஸ்ரின் வெளியிட்ட ட்வீட்டுக்கு கதிஜா கொடுத்த விளக்கத்தை புர்கா சர்ச்சை: ஏ.ஆர்.ரஹ்மான் மகள் விளக்கம்! என்ற செய்தியில் மின்னம்பலம் வெளியிட்டிருந்தது. கதிஜாவின் கேள்விக்குப் பிறகு, அவரது சகோதரரான ஏ.ஆர்.அமீன் ஒரு சுவாரசியமான ஃபோட்டோவைப் பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் அமீன் தனது முகத்தை மறைத்துக்கொண்டும், கதிஜா புர்கா அணிந்துகொண்டும், ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய மகள் ரஹிமா முகத்தை மறைக்காமலும் இருந்தனர்.

அமீன் இந்தப் படத்தைப் பகிர்ந்ததன் மூலம், தன்னுடைய முகத்தை மறைப்பதாலும், வெளிக்காட்டுவதாலும் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிடுவதில்லை என்று குறிப்பால் உணர்த்துகிறார் என்று ரசிகர்கள் பாராட்டத் தொடங்கியிருக்கின்றனர். இது, ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரைக் கலைஞர்கள் பலரிடமும் ஆதரவைப் பெற்றிருக்கிறது. பாடகர் சித் ஸ்ரீராம் உள்ளிட்ட பலர், அமீனின் இன்ஸ்டாகிராம் போஸ்டில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

-சிவா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon