மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

ஃபகத் - நஸ்ரியா - கெளதம் மேனன்: டிரான்ஸ் என்னும் ட்ரீட்!

ஃபகத் - நஸ்ரியா - கெளதம் மேனன்: டிரான்ஸ் என்னும் ட்ரீட்!

திருமணத்துக்குப் பிறகு நடிகை நஸ்ரியா தன் கணவர் ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ள டிரான்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல் வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் படத்தின் டிரெய்லரும் கவனம் ஈர்த்துள்ளது.

வித்தியாசமான திரைப்படங்களின் விளைநிலமாக விளங்கும் மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை நஸ்ரியா. ‘பெங்களூர் டேஸ்’, ‘ஓம் சாந்தி ஓஷானா’ என நஸ்ரியா நடித்த பல திரைப்படங்கள் அவருக்குத் தனி இடத்துடன், பெரும் ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. தமிழிலும் ‘நையாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என சில திரைப்படங்களில் நடித்த அவர் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் பிரபல இயக்குநர் ஃபாசிலின் மகனும், சினிமா உலகில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கியவருமான நடிகர் ஃபகத் பாசிலை நஸ்ரியா திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகு நஸ்ரியா நடிக்க வருவாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்த நிலையில் மலையாளப் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தது போன்றே நஸ்ரியா அவர் கணவர் ஃபகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் டிரான்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (பிப்ரவரி 18) வெளியானது

ஏற்கனவே வந்த சில வீடியோக்களின் மூலம் இந்தப் படத்தில் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக ஃபகத் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் டிரெய்லரைப் பார்க்கும்போது பேராசை பிடித்த பிசினஸ் மேனாக நடித்துள்ளாரா அல்லது புத்திசாலியான ஏமாற்றுக்காரனாக நடித்துள்ளாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. டிரெய்லரின் வழியாக நஸ்ரியாவின் கதாபாத்திரம் குறித்து அறிய முடியவில்லை. படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் இயக்குநர் கெளதம் மேனன். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் இயக்குநர் கெளதம் மேனனை நடிகர் கெளதம் மேனன் என்று அடையாளப்படுத்தும் அளவுக்குச் சிறப்பாக நடித்துள்ளார்.

இவை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களுக்குச் சிறந்த ட்ரீட்டாக டிரான்ஸ் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon