மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிம்பு பாட்டும், அதர்வா படமும்!

சிம்பு பாட்டும், அதர்வா படமும்!

நடிகர் அதர்வாவுடன் அனுபமா ஜோடி சேரும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இந்தப்படத்திற்கு ‘தள்ளிப் போகாதே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘கட்டலகொண்டா கணேஷ்’ தெலுங்கு படத்தைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் இந்தப்படத்தில் அனுபமா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் இளம் கதாநாயகர்களின் பட்டியலில் தனக்கான தனி இடம் பிடித்தவர் அதர்வா. முரளி என்னும் முன்னணி நடிகரின் மகன் என்னும் அடையாளத்தைக் கடந்து, நல்ல நடிகன் என்னும் பெயரையும் தனது திரைப்படங்களின் மூலம் சம்பாதித்தார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அதர்வா தற்போது ‘தள்ளிப் போகாதே’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பிரேமம் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான அனுபமா, தமிழில் கொடி திரைப்படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த அவர் தள்ளிப் போகாதே படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளார். இந்தநிலையில் இன்று வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று (பிப்ரவரி 18), அனுபமாவின் பிறந்தநாள் என்பதால் இந்தத் தகவல் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

பாடல் வரிகள் எல்லாம் படத்தின் பெயராக மாறிவரும் இந்தக் காலகட்டத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தள்ளிப்போகாதே’ பாடலின் முதல் வரியைப் படத்தின் டைட்டிலாக வைத்துள்ளனர். எனவே அதர்வா ரசிகர்களை மட்டுமின்றி சிம்பு ரசிகர்களையும் இந்தத் தலைப்பு வெகுவாகக் கவர்ந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon