மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

‘கண்டவர் விண்டிலர்’: வாழ்வில் காண முடியா அதிசயம்!

‘கண்டவர் விண்டிலர்’: வாழ்வில் காண முடியா அதிசயம்!

ஒன்றைப் பார்த்தவர்களால் பேச முடியாது. பேசுபவர்களால் காண முடியாது என்பதையே ‘கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்’ என்பார்கள். இது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பனிப்பிரதேசத்தில் வசிக்கும் பனி சிறுத்தைப் புலிகளுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். ஆனால், அப்படிப்பட்ட சிறுத்தைப் புலிகளையும் இப்போது அதிகம் காண முடிகிறது.

பனி சிறுத்தைப் புலிகள் மிகவும் அதிசயமானவை. பெரும்பாலும் இவற்றை மனிதர்களால் பார்க்கவே முடியாது. ஆனால், எவ்வித ஆரவாரமுமின்றி, மிகச் சாதாரணமாக ஒரு பனி சிறுத்தைப் புலி நடந்து செல்லும் காட்சியை சூஷந்தா நந்தா என்கிற IFS வீரர் ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள ஸ்பிடி மாவட்டத்தில் இந்த சிறுத்தைப் புலியைக் கண்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், என் வாழ்க்கையில் காணாத ஒன்றைக் கண்டேன் என்று நூற்றுக்கணக்கானவர்கள் கமெண்டும் செய்திருக்கின்றனர். ஆசிய கண்டத்தில் அதிகம் காணப்படும் இவ்வகையான சிறுத்தைப் புலிகளைக் கண்டதே இல்லை என்று பல்வேறு இடங்களிலிருக்கும் மனிதர்கள் ஒரே மாதிரியாகச் சொல்வது ஏன், யாராலும் காண முடியாத அதிசயமா இந்த பனி சிறுத்தைப் புலிகள், அவற்றின் வாழ்வியல் என்ன என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

பனி சிறுத்தைப் புலிகள் மிகவும் தனித்துவமானவை. இவற்றை மற்ற மிருகங்கள் போல உயிரியல் பூங்காக்களிலோ அல்லது காட்டு வழிப் பாதைகளில் செல்லும்போதோ பார்க்க முடியாது. இவ்வளவு ஏன், இவற்றைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பனிப் பிரதேசங்களின் மலைகளை ஏறிக் கடந்து சென்று எத்தனை நாட்கள் தங்கினாலும் இவற்றின் தரிசனம் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. இதற்கு மிக முக்கிய காரணம், தான் வாழும் சூழலுக்கு ஏற்ப இவை தங்களது உடலைத் தகவமைத்து பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுதான்.

பனி நிறைந்த பிரதேசங்களில் வாழும் இவற்றுக்கும், சாதாரணமாகக் காடுகளில் இருக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமே நிறைய வித்தியாசம் இருக்கிறது. பனியின் குளிரைத் தாங்கும் அளவுக்கு அதிகமான உரோமங்களும், செங்குத்தான மலைகளில் ஏறுவதற்கு ஏற்ப தடிமனான வால்களுடனும் இவை காணப்படுகின்றன. பனிப் பிரதேசத்தில் வாழும் மற்ற விலங்குகளுக்கும், அவற்றின் உறவுகளான காட்டில் வாழும் மிருகங்களுக்குமேகூட இவ்வளவு பெரிய வேறுபாடு இருக்காது.

மிகப்பெரிய மலைகளின் உச்சியைத் தனது இருப்பிடமாகக்கொண்டு வாழக்கூடியவை இவை. அங்கிருந்து பார்த்தால், தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் மேயும் மற்ற விலங்குகளை அடையாளம் கண்டுகொள்ளவே இவை வசிக்கும் இடங்களை அப்படித் தேர்ந்தெடுக்கின்றன. மேலே இருந்து கண்காணிக்கும்போது சிக்கும் விலங்குகளை வேட்டையாடும்போது, இவை மேலிருந்து கீழ்நோக்கிச் சென்று வேட்டையாடுகின்றன. இதற்காக மேலே ஏறுவதற்கு அந்த தடிமனான வால் உதவுகிறது.

உலகம் முழுவதுமே நான்காயிரம் முதல் ஏழாயிரம் வரையிலான பனி சிறுத்தைப் புலிகள் மட்டுமே காணப்படுகின்றன. அதிலும், இவை இந்தியாவின் இமயமலை மற்றும் அதைச் சுற்றிய பனிப் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து பனி சிறுத்தைப் புலிகளைத் தேடிச்சென்ற பலருக்கும் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேநேரம், இந்தியாவிலிருந்து அவற்றைத் தேடிச் சென்ற பலர் திரும்ப வரவே இல்லை. இதற்குக் காரணம் பனி சிறுத்தைப் புலிகள்தான்.

பனி சிறுத்தைப் புலிகள் அதீத குளிரைத் தாங்கி வாழக்கூடியவை என்பதால், அவற்றின் உடலுக்குள் உள்ள பாகங்கள் மிகச்சரியாக வேலை செய்யவேண்டியது அவசியம். அதற்கேற்ப தங்களது உணவு முறையையும் இவை மாற்றிக்கொண்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், மிகவும் சக்தியுடன் இருக்கும் இந்த பனி சிறுத்தைப் புலிகளின் உடலுக்குள் இருக்கும் பாகங்கள், மருத்துவத் துறைக்குத் தேவையானதாக சில வதந்திகள் பரவியிருக்கின்றன. இவற்றின் காரணமாக பனி சிறுத்தைப் புலிகளை வேட்டையாடுவதற்கு பலரும் பனிப் பிரதேசங்களுக்குப் பயணமாவது தொடர்கதை. ஒரு இறந்த பனி சிறுத்தைப் புலியை இருபது முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை லோக்கல் வேட்டைக்காரர்கள் விற்பதும், அவற்றை ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு 40 லட்சம் முதல் 4 கோடி வரை சர்வதேச கடத்தல்காரர்கள் விற்பதும் வெளிப்பட்ட பிறகு இவற்றை அதிகமானவர்கள் தேடத் தொடங்கினார்கள். தன்னைத் தாக்க வருகிறார்கள் என்று தெரிந்ததும், இயற்கையுடன் ஒன்றிப்போய் இலக்குகளை வேட்டையாடுவது இவற்றுக்குச் சர்வ சாதாரணம். குளிர் பிரதேசம் என்பதாலும், செங்குத்தான மலைகளுக்கு இடையே வேட்டையாட வேண்டும் என்பதாலும் குறி வைத்த இலக்கை வெற்றிகரமாகத் தாக்குவதில் இவை அசாத்திய திறமையைப் பெற்றவை. அதேசமயம், இந்த அசாத்திய வேட்டைத் திறமையே இவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கும் காரணம் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது.

காட்டில் வாழும் சிறுத்தைப் புலிகளைவிட, பனிப் பிரதேசத்தில் வாழும் சிறுத்தைப் புலிகளுக்கு வேட்டையாடுவதில் அதிசிறந்த திறமைகள் தேவைப்படுகின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அதுபோல, செங்குத்தான மலைகளில் ஏறி மேய்ந்துகொண்டிருக்கும் வரையாடுகள் மாதிரியான விலங்குகளை வேட்டையாடும்போது, சிறிது பிசகினாலும் பள்ளத்தாக்கில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். வெளிப்புறத்தில் ஏற்படும் காயத்திலிருந்து தானாக குணமாகும் வாய்ப்பு மிருகங்களுக்கு மிகக்குறைவு. அதிலும், மனிதர்களின் வாடையற்று வாழும் பனி சிறுத்தைப் புலிகளைக் கண்டுபிடித்து மருத்துவம் பார்ப்பது இதுவரை நடைபெறாத ஒன்று. ஆனால், அப்படியும் சில பனி சிறுத்தைப் புலிகளைக் கொண்டுவந்து உயிரியல் பூங்காக்களில் பராமரித்து, அவற்றை இனப்பெருக்கம் செய்து குட்டிகளை வளர்த்தனர். அப்படி வளர்க்கப்பட்ட குட்டிகள் வேறு உயிரியல் பூங்காக்களுக்கும் கொடுக்கப்பட்டன. ஒருகட்டத்தில் அதிகமான பனி சிறுத்தைப் புலிகள் உருவானதால், முழு வளர்ச்சியடைந்த சிலவற்றை பனிப்பிரதேசங்களில் விட்டு அவற்றை இயற்கையான வாழ்வுக்கு உட்படுத்தினர். ஆனால், அப்படி விடப்பட்டவற்றில் ஒரு சிறுத்தைப் புலிகூட வெற்றிகரமாக ஒரு வருட வாழ்வைக் கடக்கவில்லை. ஏன், உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் சிறுத்தைப் புலிகளுக்கே உத்தரவாதம் இல்லாத சூழலே நிலவுகிறது.

ஃபின்லாந்தில் உள்ள அதாரி உயிரியல் பூங்காவில் வசித்து வந்த ஷிலா (இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது) என்ற பனி சிறுத்தைப் புலி, இரண்டு பெண் சிறுத்தைப் புலிக் குட்டிகளை ஈன்றபோது இறந்துபோனது. சில நிமிடங்களில் அந்தக் குட்டிகளும் இறந்தன. இதற்குக் காரணம், அவற்றுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை இல்லாததுதான் என அதாரி உயிரியல் பூங்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. வெற்றிகரமாகப் பிறந்து வளரும் சிறுத்தைப் புலிகளை பனிப் பிரதேசங்களில் கொண்டு சென்றுவிடும்போது, அவை மற்ற சிறுத்தைப் புலிகளின் இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றால் வேட்டையாடப்பட்டிருக்கின்றன. பனி மலையிலேயே வாழ்ந்து அங்கு வேட்டையில் சிறந்து விளங்கும் சிறுத்தைப் புலிகளுக்கு முன்பு, உயிரியல் பூங்காக்களில் வாழ்வைக் கடத்திய சிறுத்தைப் புலிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் நூறு பனி சிறுத்தைப் புலிகள் இறந்துபோவதாகப் பனி சிறுத்தைப் புலிகள் பாதுகாப்பு மையம் அறிவித்திருக்கிறது.

பனி சிறுத்தைப் புலிகள் அழிவு விளிம்பில் இருக்கும் விலங்காக அறிவிக்கப்படவில்லை. ஆனால், வேகமாக அழிந்துவரும் விலங்காக இருக்கிறது. மாறிவரும் பருவநிலையின் தாக்கத்தினால் தனக்கான உணவு கிடைக்காமல் மனிதர்கள் வாழும் பகுதியை நோக்கி பனி சிறுத்தைப் புலிகள் வரும் சூழல் உருவாகியிருப்பதைப் பார்க்கும்போது இவற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியம் அதிகமாகிறது. ஆசிய கண்டத்தின் சிறப்புகளில் ஒன்றான பனி சிறுத்தைப் புலிகளை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற அவற்றைச் சீண்டாமல் இருப்பதே நல்லது. ஒருவேளை அவற்றைக் காண முறையான அனுமதியும் அனுபவமிக்கவர்கள் உதவியும் இல்லாமல் சென்றால், கண்டவர் விண்டிலர் என்பதே மீண்டும் நிரூபணமாகும்.

-சிவா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon