மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

என்ன சிம்ரன் இதெல்லாம்?

என்ன சிம்ரன் இதெல்லாம்?

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சிம்ரன் வெளியிட்ட சிறப்பு வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. வயது என்பது வெறும் ஒரு எண் தான் என்பதை நிரூபிக்கும் விதத்திலான அவரது இளமையான தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1995-ஆம் ஆண்டு சனம் ஹார்ஜி என்னும் இந்தி திரைப்படம் மூலம் தனது திரைவாழ்க்கையைத் தொடங்கியவர் நடிகை சிம்ரன். தொடர்ந்து விஐபி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர் அந்த வருடத்தின் சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதையும் பெற்றார். தொடர்ந்து தனது தனித்துவமான நடிப்பின் மூலமாகவும், அனைவரையும் கவரும் நடன அசைவுகளாலும் பெரும் ரசிகர்களைப் பெற்றார். விஜய், அஜித் , சூர்யா என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரன், அவரது கட்டுக்கோப்பான உடல் தோற்றத்திற்காகவும் பெரிதும் பாரட்டப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்துவந்த சிம்ரன் திருமணத்திற்குப் பிறகு சற்று இடைவெளி எடுத்துக் கொண்டார். மீண்டும் சில திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என்று பிஸியான அவர் தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் சிம்ரனின் தோற்றம். 43 வயதாகும் சிம்ரன் அந்த வீடியோவில் அவரது முதல் திரைப்படத்தில் இருந்ததை விடவும் இளமையாகத் தெரிகிறார். பத்து லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற அந்த வீடியோவுக்குக் கீழே, “சிம்ரனா இது?”, “90’ஸ் கிட்ஸின் ஏஞ்சல் மீண்டும் கிடைத்துவிட்டார்”, என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல நடிகர்களும் சிம்ரனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றர். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் தனுஷ் சிம்ரனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon