மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

காப்பிரைட் ஸ்டோரி: நெற்றிக்கண் திறப்பினும் தில்லுமுல்லு சொந்தமல்ல!

காப்பிரைட் ஸ்டோரி: நெற்றிக்கண் திறப்பினும் தில்லுமுல்லு சொந்தமல்ல!

ரஜினி நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ரீமேக்கில் தனுஷ் நடிப்பதாக ஒரு தகவல் சமீபகாலமாகவே வலம்வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு நெற்றிக்கண் திரைப்படத்தின் கதாசிரியரான நடிகர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் விசு அவர்கள் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதற்கு இப்போது கவிதாலயா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விசு வெளியிட்டிருந்த வீடியோவில் “என்னைக் கேட்காமல் நான் எழுதிய கதையை யாரிடமும் விற்கக்கூடாது. நெகட்டிவ் உரிமையை வைத்திருப்பதற்கு மட்டுமே நெற்றிக்கண் திரைப்படத்தைத் தயாரித்த கவிதாலயாவிற்கு உரிமை இருக்கிறது. கதையை இன்னொருவருக்கு விற்பதற்கு எழுத்தாளரான என்னுடைய அனுமதி அவசியம். பாலச்சந்தர் காலத்தில் இதனை நான் கண்டுகொள்ளாமல் இருந்தேன். இப்போது தனுஷ் நெற்றிக்கண் திரைப்படத்தை ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. என்னிடம் அனுமதி பெறாமல் படத்தைத் தொடங்கினால், நான் வழக்குத் தொடர நேரிடும். பிறகு என் மீது கோபித்துக்கொண்டு பயனில்லை” என்று கூறியிருந்தார்.

விசுவின் வீடியோவுக்கு பதிலளிக்கும் விதத்தில் கவிதாலயாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கவிதாலயாவின் ‘நெற்றிக்கண்’, ‘தில்லுமுல்லு’ – திரைப்பட தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை

கவிதாலயா, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத்துறையில், பல்வேறு மொழிகளில் திரைப்படத்தயாரிப்புத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி நிறுவனம். தமிழ் திரையுலக ஜாம்பவான் கே.பாலச்சந்தர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், ஆரம்பம் முதலே திரைப்படக் காப்புரிமை குறித்து மிகுந்த கவனமும், அக்கறையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆகையால், ஒருபோதும் இந்நிறுவனம் விதிமீறல்களுக்கு எந்த விதத்திலும் இடம் அளித்ததில்லை. மேலும், கவிதாலயா எழுத்தாளர்களின் பங்கையும், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருப்பதால், அவர்களை மிகுந்த மரியாதையுடனேயே எப்போதும் நடத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம். அது குறித்து தெளிவுபடுத்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கேட்டு, யாரும் இதுவரை எங்களை

அணுகவும் இல்லை. நாங்களும் யாருக்கும் கொடுக்கவும் இல்லை. இந்நிலையில் திரு. விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை எனக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. அவ்வாறு, ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும். செயல்பட்டும் வந்திருக்கிறது. மேலும், திரு.விசு அவர்கள் கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்த மீறல்களுக்கும், விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்திக் கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறோம். நன்றி

கவிதாலயாவின் இந்த விளக்கம் பல சந்தேகங்களைத் தீர்த்திருக்கிறது. தில்லு முல்லு திரைப்படத்தை 1981இல் கவிதாலயா தயாரித்தபோது, புகழ்பெற்ற எழுத்தாளரான சைலேஷ் தே எழுதிய கோல்மால் நாவலின் உரிமையைப் பெற்று படமாக எடுத்தனர். அந்தக் கதையிலிருந்து நல்ல திரைக்கதையை உருவாக்கியவர் விசு. இந்தக்கதைக்கும், விசுவுக்கும் இவ்வளவு தான் தொடர்பு. ஆனால், தில்லு முல்லு திரைப்படத்தை 2013இல் ரீமேக் செய்தபோது ‘திரைக்கதையை எழுதியதில் என் பங்கு இருக்கிறது’ என விசு கூறியதில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு திரையுலகம் அவருக்கு ஆதரவாகப் பேசாமல் போனது. காரணம், கதையின் உரிமையை வாங்கியது கவிதாலயா. தயாரிப்பது கவிதாலயா. இந்தப் படத்தின் திரைக்கதைக்கு விசு சொந்தம் கொண்டாட முடியாது என்கின்றனர் திரையுலகினர். ஆனால், நெற்றிக்கண் திரைப்படத்தின் கதை தலைகீழாக மாறுகிறது. ஏனென்றால், நெற்றிக்கண் திரைப்படத்தின் கதை-திரைக்கதை ஆகிய இரண்டையும் எழுதியவர் விசு. எனவே, அந்தப்படத்தின் ரீமேக் உரிமையை விற்றால் விசுவுக்கு சேரவேண்டிய தொகையை கண்டிப்பாக கவிதாலயா கொடுத்தாகவேண்டும். இதனையே, இதுவரை எங்களை யாரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் ரீமேக் உரிமை கேட்டு தொடர்புகொள்ளவில்லை என்று கவிதாலயா விளக்கம் அளித்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

-சிவா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon