மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அன்புச்செழியன் ஆஜர்: அடுத்து விஜய்?

அன்புச்செழியன் ஆஜர்: அடுத்து விஜய்?

விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த பிகில் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும், அந்தப் பணத்துக்கு வரி கட்டவில்லை என்றும் நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் நிறுவனம், ஃபைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த பணம் மற்றும் ஆவணங்களுக்கு சரியான கணக்கு வழக்குகளைக் கொடுக்க நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர்.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி முதலில் வருமான வரித் துறை அலுவலகத்துக்குச் சென்று விசாரணையில் ஆஜராகிவிட்டு வந்தபோது, தானாக முன்வந்து தன்னை அவர் விசாரணையில் ஈடுபடுத்திக்கொள்வதாகவே கருதப்பட்டது. காரணம், விஜய்-ஏ.ஜி.எஸ்-அன்புச்செழியன் ஆகியோரது தரப்பு ஆடிட்டர்கள் சோதனை முடிந்த அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி கணக்கு வழக்குகளை சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், ஃபைனான்சியர் அன்புச்செழியன் இன்று(18.02.2020) வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். எனவே, விஜய்யும் இவர்களைப் போலவே நேரில் ஆஜராகி விசாரணைக்கு பதிலளிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் கேட்கப்படுகிறது.

விஜய்யின் ஷெட்யூல் குறித்து விசாரித்தபோது, பூந்தமல்லியிலுள்ள EVP ஸ்டூடியோவுக்கு எதிரே மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினமும் விஜய்யின் கால்ஷீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் கூட பிரேக் கொடுக்காமல் ஷூட்டிங் நடத்துவதால், விஜய் வருமான வரித் துறையினரின் விசாரணைக்கு ஆஜராவதற்கான வாய்ப்பு பாதிக்குப் பாதி தான் என்கின்றனர்.

-சிவா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon