மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ஷங்கருக்கு முன்பு பார்த்திபனிடம் கேட்ட விஜய்

ஷங்கருக்கு முன்பு பார்த்திபனிடம் கேட்ட விஜய்

நடிகர் விஜய், தன்னை நண்பன் திரைப்படத்தை இயக்கச் சொன்னது குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன். மேலும், அழகிய தமிழ் மகன் திரைப்படத்துக்கும் தன்னையே கதை எழுத அழைத்தார் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் சகஜமாக இயங்கும் திரைக்கலைஞர்களில் பார்த்திபனும் ஒருவர். சாதாரணமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தயக்கமில்லாமல் பதில் கூறுவதும், அவர்களது சந்தேகங்களுக்கு பதில் சொல்வதும் பார்த்திபனின் வழக்கம். அப்படியொரு ரசிகர் நடிகர் விஜய்யுடன் பார்த்திபன் நிற்கும் ஃபோட்டோவைப் பகிர்ந்து, இவர்கள் இருவரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அந்த ஃபோட்டோவுக்கு ரிப்ளை செய்த பார்த்திபன், “Massக்கு MASTER-ஐ பிடிக்கும். Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். 'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று கூறியிருக்கிறார்.

ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் மிக நீண்ட காலம் கழித்து விஜய்யின் மீது ஒரு புதிய ஒளியை பாய்ச்சியது. ஃபிரெண்ட்ஸ் திரைப்படங்களில் நடித்தது போல ஒரு கலகலப்பான விஜய்யை அதில் பார்க்கமுடிந்தது. அதேபோல, அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து விஜய் புதுமுயற்சி செய்தார். இந்த இரண்டு படங்களிலும், எப்போதும் புதிய முயற்சிகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் பார்த்திபன் இணைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் கற்பனை செய்துகொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை. தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சிக்கு முன்பே அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்ட விஜய் இதுவரை அமைதிகாத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ‘அடுத்த லெவலில் நடக்கும்’ என பார்த்திபன் குறிப்பிட்டிருப்பது இவருடன் விஜய் இணைகிறாரா என்ற கேள்வியை உருவாக்கியிருக்கிறது. 

-சிவா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon