மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சிவகார்த்திகேயனின் வேற்றுகிரகத் தோழர்!

 சிவகார்த்திகேயனின் வேற்றுகிரகத் தோழர்!

ஹீரோ திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் மீண்டும் சயின்ஸ் பிக்‌ஷன் கதையை மீண்டும் கையில் எடுத்துள்ளார் என்று தெரிந்ததுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதுமே ஏலியன்கள் குறித்த கதையாக இது இருக்குமா என்ற சந்தேகம் வலுவாக எழுந்தது. இதுகுறித்து நமது மின்னம்பலம் தினசரியில் அயலானாக மாறிய ஹீரோ! என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

தொடர்ந்து அயலான் படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட்டிங்கின் சில புகைப்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். நீல நிற விளக்குகள் சுற்றி ஒளிரும் வகையிலான அந்தப் புகைப்படம், அயலானில் வரப்போகும் ‘அயலான்’ யார் கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பட்டாம்பூச்சிகள் சுற்றிப்பறக்கும் ஒரு புல்வெளியில், சிவகார்த்திகேயன் சிரித்தபடி படுத்திருக்கிறார். அவருக்கு அருகில் ஜொலிக்கும் பெரிய கண்கள், குட்டிக் காதுகள், தலையில் ஆன்டனாவுடன் ஏலியன் ஒன்று படுத்திருக்கிறது. அந்த ஏலியனின் கையில் லாலிபாப் ஒன்று உள்ளது.

இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “வேற்றுக்கிரகத்திலிருந்து வந்திருக்கும் எனது நண்பனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஏலியன் கதை புதிது அல்ல. 1963ஆம் ஆண்டே எம்ஜிஆர் நடித்த கலையரசி திரைப்படத்தில் ஏலியன்களை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். கடந்த ஐம்பது வருடத்துக்கும் மேலாகத் திரைப்படங்களில் ஏலியன்கள் குறித்த கதை இடம்பெற்றுள்ளது.

ஆரி நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’, விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்று பல திரைப்படங்களில் ஏலியன்களை நம்மால் பார்க்க முடிந்தது. இத்தனை வருடங்களாக சினிமாவில் காட்டப்பட்டு வந்த ஏலியன்களில் கற்பனை உருவத்தோற்றத்தை மீண்டும் அதே ஃபார்முலாவில் மாறாமல் காட்டியுள்ளனர்.

நேற்று (பிப்ரவரி 17) இரவு 7.07 மணி என்ற வித்தியாசமான நேரத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதால், இந்த நேரத்துக்கும் ரிலீஸ் தேதிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்னும் கோணத்தில் ரசிகர்களின் சிந்தனை விரிகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் அயலான் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon