மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

ராதாரவி VS சின்மயி: மன்னிப்பும் மறு வாய்ப்பும்!

ராதாரவி VS சின்மயி: மன்னிப்பும் மறு வாய்ப்பும்!

‘தங்களிடம் மன்னிப்பு கேட்டால் மீண்டும் டப்பிங் யூனியனில் இணைத்துக் கொள்வோம்’ என்று ராதாரவி கூறியதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வரும் சின்மயி கடந்த 2018-ஆம் ஆண்டு டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். சந்தா தொகையை சரிவர செலுத்தாததே அவர் நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணமாக டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 15) டப்பிங் சங்கத்தின் முக்கியப் பதவியிடங்களுக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் மீண்டும் ராதாரவி தலைவர் பதவிக்காக மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிராகப் போட்டியிட ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவர் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லை என்று கூறி அவரது மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. எதிர் போட்டியாளர் இல்லாத காரணத்தால் மீண்டும் ராதாரவியே தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

டப்பிங் யூனியனின் மற்ற பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று(பிப்ரவரி 15) நடைபெற்றது. இந்த நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் ராதாரவி பேசும்போது, “சின்மயி மன்னிப்பு கேட்டால் மீண்டும் டப்பிங் யூனியனில் சேர்ப்போம்” என்று தெரிவித்தார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சின்மயி, ராதாரவி கூற்றுக்கு பதிலளிக்கும் விதமாக “ராதாரவி காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்குச் சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்தப் பிரச்சனையைச் சந்திப்பேன்” என்று தெரிவித்தார்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon