மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

அனிருத் சார், குட்டிக்கதை காப்பியா? இன்ஸ்பிரேஷனா?

அனிருத் சார், குட்டிக்கதை காப்பியா? இன்ஸ்பிரேஷனா?வெற்றிநடை போடும் தமிழகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திலிருந்து ‘ஒரு குட்டி கதை’ பாடல் காதலர் தினமான நேற்று(பிப்ரவரி 14) வெளியானது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இயக்குநர் அருண் ராஜா காமராஜ் வரிகள் எழுதியுள்ள இந்தப் பாடல், வெளியான சிறிது நேரத்திலேயே இணைய உலகில் தனி இடம் பிடித்தது. ‘ஒரு குட்டிக் கதை’ பாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் தனித்துவம் குறித்து நமது மின்னம்பலம் தினசரியில் விஜய்யின் குட்டிக் கதை எப்படி இருக்கு?என்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

‘டிசைன் டிசைனாக பிரச்னைகள் வந்து போனாலும் கூலாகவே இருங்கள்’ விஜய் பாடியுள்ள இந்த பாடலுக்கும் டிசைனான பிரச்னை ஒன்று வந்துள்ளது. முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்த ஒரு பாடலில் அங்கங்கே தமிழ் வார்த்தைகளை வைத்து இந்தக் குட்டிக் கதை இருக்கிறது. ஏற்கனவே இந்தப்பாடல் தனுஷ் நடித்த ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலின் சாயலில் இருப்பதாகப் பலரும் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் அதைவிடப் பெரிய சிக்கலை நெட்டிசன்கள் கண்டறிந்துள்ளனர். தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலைப் போன்றே இதுவும் அப்பட்டமான காப்பி என்கின்றனர் இணையவாசிகளான சில இளைஞர்கள்.

சும்மா கிழி பாடல் வெளியான போது, அது ஒரு ஐயப்பன் பாடலின் சாயலில் இருப்பதாகக் கூறிப் பலரும் கிண்டல் செய்துவந்தனர். இந்த நிலையில் விஜய் பாடியிருக்கும் இந்த ‘ஒரு குட்டி கதை’ பாடல் ‘சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்’ பாடலின் அதே டியூனில் இருப்பதாகக் கூறி ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

இவ்வாறான கேலி, கிண்டல்கள் வரும் என்பதை முன்பே தெரிந்துதான் “வெறுப்பவர்கள் வெறுத்துக்கொண்டே தான் இருப்பார்கள். அதனை அமைதியாக தவிர்த்துவிடுங்கள்” என்று தனது ரசிகர்களுடன் சேர்த்து தனது மாஸ்டர் டீமுக்கும் விஜய் கூறி இருப்பாரோ என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 14 பிப் 2020