மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

‘உசைன் போல்ட்’டை விட வேகம்!

‘உசைன் போல்ட்’டை விட வேகம்!

உலகின் அதிவேகமாக ஓடும் ‘மின்னல் மனிதன்’ என்று புகழப்பட்ட உசைன் போல்ட்டின் உலக சாதனையை இந்திய இளைஞர் ஒருவர் முறியடித்துள்ளார்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 34 வயதாகும் உசைன் போல்ட் ஒலிம்பிக்கில் மின்னல் வீரர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வாங்கிக் குவித்த அவர் 100 மீட்டர் தொலைவை வெறும் 9.58 நொடிகளில் கடந்து மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். உலகின் வேகமான மனிதன் என்ற பெயரைப் பெற்று உசைன் நிகழ்த்திய சாதனையை வேறு யாராலும் கடக்க முடியவில்லை. ஆனால் இந்த சாதனையை தென்னிந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முறியடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் ‘கம்பலா’ என்னும் போட்டி மிகவும் பிரபலமானது. சேறும் சகதியும் நிறைந்த ஓடுகளத்தில் கலப்பையுடன் இரு எருமைகளை இணைத்துக்கொண்டு ஓடும் இந்தப்பந்தயம் கர்நாடகாவின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. பல வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பலரும் கலந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தப்போட்டி உலக அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது. போட்டியில் கலந்துகொண்ட மங்களூரூவைச் சேர்ந்த சீனிவாச கவுடா என்ற இளைஞர், போட்டியின் 142.50 மீட்டர் தூரத்தை வெறும் 13.62 விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அதே தொலைவை 100 மீட்டர் தூரத்திற்கு கணக்கிட்டுப் பார்க்கும் போது உசைன் போல்ட்டின் உலக சாதனையை சீனிவாச கவுடா முறியடித்தது தெரியவந்துள்ளது. 100 மீட்டர் தொலைவை 9.55 நொடியில் கடந்து வெற்றி பெற்ற அவர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளோடு உலகப் புகழையையும் சம்பாத்தித்துள்ளார்.

சேறு நிறைந்த ஓட்டப் பாதையிலேயே இத்தனை வேகத்தில் சீனிவாச கவுடாவால் ஓட முடியும் என்றால், சாதாரண தளத்தில் ஓடினால் எப்பேற்பட்ட சாதனை நிகழ்த்துவார் என்று பலரும் கேட்டுவருகின்றர். மேலும் இவரது சாதனை தொடர்பாகப் பிரபலங்கள் உள்படப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து இவரது சாதனை தொடர்பான வீடியோவைப் பார்த்த மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு “இவருக்கு முறையான பயிற்சி அளித்தால் 100 மீட்டர் ஓட்டத்தில் சிறந்த வீரராக வருவார். மேலும் கம்பலாவை ஒலிம்பிக் போட்டியிலும் சேர்க்க முயற்சிக்கலாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ “இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூத்த பயிற்சியாளர்கள் மூலம் அவருக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தின் தன்மை, தரம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்தியாவில் திறமையான எவருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் அவரைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவருக்கு வேண்டிய ரயில் டிக்கெட் எடுக்கப்பட்டுவிட்டது. திங்கள்கிழமை அவர் இந்திய விளையாட்டு ஆணைய மையத்தை அடைவார். தேசிய அளவிலான சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் அவருக்குப் பயிற்சியளிக்கப்படும் என்று நான் உறுதியுடன் கூறுகிறேன். சிறந்த விளையாட்டுத் திறமையாளர்களை அடையாளம் காண நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து உதவிகளையும் வழங்கிவருகிறார்” என்று உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ள சீனிவாச கவுடாவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon