மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

‘இது அன்பின் மிகுதி’: டாக்டருக்கு திருஷ்டி கழித்த பேஷன்ட் பாட்டி!

‘இது அன்பின் மிகுதி’: டாக்டருக்கு திருஷ்டி கழித்த பேஷன்ட் பாட்டி!

கடினமான வலிகளில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் விடுபட உதவி செய்து விடுதலை அளிக்கும் மருத்துவர்களுக்குப் பலரும் தங்கள் மனதில் மிக உயரிய இடத்தை அளித்துள்ளனர். அதிலும் கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு அத்தகைய மருத்துவர்கள், கடவுளின் மறு உருவாகவே தெரிகிறார்கள்.

இன்றைய சூழலில் ‘கல்வியைப் போன்றே, மருத்துவத்தையும் வியாபாரமாக்கி சிலர் பெருமளவு சம்பாதிக்கிறார்கள்’ என்ற கூற்றை முற்றிலும் மறுத்துவிட முடியாது. ஆனால் ‘எல்லா மருத்துவர்களும் அப்படித் தான் செய்கிறார்கள்’ என்று பொதுவில் ஒரு பொய்யைக் கூறி விடவும் முடியாது. இது ஒருபுறம் என்றால் சில முதியவர்கள் நன்மை நிறைந்த டாக்டர்களை தங்களுக்கு நெருங்கிய உறவாக, சொந்த மகனாக, மகளாக, அன்புப் பேரப்பிள்ளையாக பாவித்து பேரன்பைப் பொழிந்து வருகின்றனர்.

இத்தகைய அன்பு நிறைந்த டாக்டர்களையும், பேரன்பு நிறைந்த பேஷன்டுகளையும் அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் நம்மால் பார்க்க இயலும். அதற்கு ஒரு உதாரணம் என்பதைப் போன்று மருத்துவர் ஒருவர் பகிர்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. டாக்டர். குரு ப்ரூனோ என்னும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தங்களைக் கவனிக்கும் மருத்துவர்களிடம் தமிழக மக்கள் எவ்வாறு அன்பு செலுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் பிரகாஷ் ராஜேந்திரன் என்னும் மருத்துவருக்கு வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்துவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. மனித நேயத்துடன் தொடர்ந்து வேலை செய்துவரும் அந்த மருத்துவருக்கு கண்ணுபட்டு விடக் கூடாது என்று அந்த வயதான பாட்டி திருஷ்டி கழிக்கிறார். மருத்துவர்-நோயாளி என்ற உறவைக் கடந்து, சொந்த பேரனுக்குச் செய்வதைப் போன்ற அத்தனை அக்கரை அந்த பாட்டியின் செய்கையில் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த மருத்துவர், ‘தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் மருத்துவர்களைத் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போன்றே கவனித்து வருகிறார்கள். குறைந்த ஊதியம் மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறை இருந்தும் கூட இத்தகைய அன்பின் மிகுதி தான் எங்களை அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து வேலை செய்ய வைக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாட்டியின் அன்பு அனைவரையும் நெகிழ வைத்தாலும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் நெருக்கடியான சூழலை டாக்டர் விளக்கியது பொதுமக்களுக்கு வருத்தத்தையும் தந்துள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon