மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

காதலிக்கும் காதலிக்கும் சண்டை: வேடிக்கைப் பார்க்கும் வி.எஸ்!

காதலிக்கும் காதலிக்கும் சண்டை: வேடிக்கைப் பார்க்கும் வி.எஸ்!

நடிகர் விஜய்சேதுபதி ‘96’ திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமாரைச் சந்தித்துப் பேசியது தான் சிறிது நேரம் முன்புவரை இணைய உலகில் பேசுபொருளாக இருந்தது. அந்த செய்தியை ஓவர் டேக் செய்யும் விதமாக விஜய்சேதுபதி சார்ந்த மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

96 படத்தின் இயக்குநர் பிரேம் குமாரின் வீட்டுக்கு மதிய உணவுக்குச் சென்ற விஜய் சேதுபதி, அவரது வீட்டில் இருக்கும் த்ரிஷா என்ற பூனையுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டார். அந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம் பதிவிட்டு ‘த்ரிஷா-விஜய்சேதுபதி-96 மூவி’ என்று குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘96 பார்ட் டூ’ உருவாகப்போகுதா? என்ற கேள்வியை காப்பி பேஸ்ட் செய்தது போலத் தொடர்ந்து கேட்டு வந்தனர். இது தொடர்பாக நமது மின்னம்பலம் மொபைல் தினசரியில் இன்று(பிப்ரவரி 14) விஜய் சேதுபதி சந்திப்பு: 96 பார்ட் 2 ரெடியாகிறதா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

மிகவும் பரவலாகப் பேசப்பட்டு வந்த இந்தத் தகவலையே ஓரம்கட்டும் விதமாக ஒரு சிறப்புத் தகவல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற புதிய திரைப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை ரசிக்க வைத்தது என்றால், அந்தப்படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் நேரடியாக மோதப் போகிறார்கள் என்பது தெரியவந்ததும் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் எல்லை மேலும் விரிவானது.

விக்னேஷ் சிவனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நானும் ரவுடி தான் திரைப்படத்தின், விக்னேஷ் சிவன்-விஜய் சேதுபதி-நயன்தாரா-அனிருத் வெற்றிக் கூட்டணி மீண்டும் இந்தத் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்தத் தகவல் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-இரா.பி.சுமி கிருஷ்ணா

வெள்ளி, 14 பிப் 2020