மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

முதல் ஃபிளைட்: உருகிய மனதுடன் சூர்யா

முதல் ஃபிளைட்: உருகிய மனதுடன் சூர்யா

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் பாடலான ‘வெய்யோன் சில்லி’ பாடல் நேற்று (13.02.2020) வெளியிடப்பட்டது. ஒரு திரைப்பட பாடல் வெளியீடு என்பதைத் தாண்டி பல விதமான உணர்வுகளை இந்த நிகழ்ச்சி உருவாக்கியிருக்கிறது. அகரம் என்ற தன்னார்வு கல்வி தொண்டு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளைத் தனிப்பட்ட முறையில் செய்துவந்தாலும், எங்கெல்லாம் தன்னால் உதவியைப் பெற முடியுமோ, அங்கிருந்தெல்லாம் உதவியைப் பெற்று இயலாதவர்களுக்கும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும் கொடுக்க முயற்சி செய்பவர் சூர்யா. அந்த வகையில் தனது சூரரைப் போற்று திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் ஒரு புது ஏற்பாடு செய்திருந்தார்.

ஜவ்வாது மலை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரிடம் தங்களது கனவுகள் குறித்த கட்டுரைகளை எழுதி அனுப்பும்படி ஒரு போட்டியை வைத்தது சூரரைப் போற்று டீம். அப்படிக் கிடைத்த கட்டுரைகளில் சிறப்பாக எழுதியிருந்த 100 பேரைத் தேர்ந்தெடுத்து, நேற்றைய விழாவில் விமானத்தில் அழைத்துச்செல்ல திட்டமிட்டனர்.

சூரரைப் போற்று திரைப்படத்தின் நாயகனான நெடுமாறன் ராஜாங்கம் என்ற கேரக்டர், உண்மையில் டெக்கான் ஏவியேஷன் என்ற விமான சேவை வழங்கும் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. “2000ஆவது ஆண்டில், மொத்த இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். அனைத்து மக்களும் விரைவான பயணத்தை மேற்கொள்ளும் விதமாக விமான சேவைத் துறையை மாற்ற வேண்டும் என்ற முடிவில் ஒரு ரூபாய்க்கு மக்கள் பயணம் செய்யும் டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தை கோபிநாத் தொடங்கினார். அவரைப் பற்றிய திரைப்படத்தின் நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் நூறு பேராவது முதன்முறை விமானப் பயணம் செய்ய வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தி 100 பேரை தேர்வு செய்தோம். அவர்களையெல்லாம் விமானத்தில் அழைத்துச் செல்லப் போகிறோம் என்று கூறியபோது, ‘எங்களைவிட என் அம்மாவை, அக்காவை, அப்பாவை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறியது இந்த முயற்சியின் முகத்தையே மாற்றியது. நேற்று விமானத்தில் பயணித்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு, அதைக் கொண்டாடிய விதம் இவற்றைப் பார்க்கும்போது அன்று கோபிநாத் அவர்களுடைய வெற்றி எந்த மாதிரியான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று உணரமுடிகிறது. சூரரைப் போற்று படத்தில், அவர் எதிர்கொண்ட வலிகளை அறிந்தேன். இப்போது இந்த மகிழ்ச்சியை உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சிக்கு அதுபோல எவ்வளவு வலிகளை வேண்டுமென்றாலும் தாங்கலாம்” என்று நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்த சூர்யா கூறினார்.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon