மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

வெற்றிபெறும் முனைப்பில் நியூசிலாந்து!

வெற்றிபெறும் முனைப்பில் நியூசிலாந்து!

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன் எடுத்தது. பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 29 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது போட்டி முதல் டி20 போட்டி நடந்த அதே ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற முயற்சி செய்யும். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியின் வெற்றியால் அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தப் போட்டியில் யாரேனும் ஒருவருக்கு விராட் கோலி வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து அணி முதல் போட்டியில், பந்துவீச்சில் சொதப்பியுள்ளதால் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுவரை இரண்டு அணிகளும் டி20யில் நேருக்கு நேராக 12 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணி 4இல் வெற்றியும், நியூசிலாந்து அணி 8இல் வெற்றியும் பெற்றது. நியூசிலாந்தில், இந்திய அணி இதுவரை 6 டி20 போட்டிகளில் விளையாடி 2 டி20 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 2 போட்டிகளும் ஆக்லாந்து மைதானத்தில் விளையாடிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆக்லாந்தில் நடைபெறும் போட்டியில் தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும். இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

ஞாயிறு, 26 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon