மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தோனி: பிசிசிஐ அளித்த பதில்!

தோனி: பிசிசிஐ அளித்த பதில்!

இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ள சீனியர் வீரர்கள் கான்ட்ராக்ட் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி பெயர் இடம்பெறாதது, சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களுடன் பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் வெளியிட்ட கான்ட்ராக்டில், கிரேடு A பிரிவில் தோனியின் பெயர் இடம்பெற்றிருந்தது. 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு எந்தத் தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. 2014ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, பிசிசிஐ குறிப்பிட்டுள்ள அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை, எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகக் கோப்பை போட்டியின் போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட தோனி, அதைப்பற்றி தேசிய கிரிக்கெட் அகாடமியில் எந்த ஒரு கடிதமோ, தகவலோ தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக காஷ்மீரில் ராணுவத்தில் 2 மாதத்திற்கு பயிற்சிக்காக சென்றுவிட்டார். இதற்கு இந்திய வீரர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தாலும், அணியில் எந்த ஒரு பங்கும் செலுத்தவில்லை.

இவைகளை மேற்கோள் காட்டிய பிசிசிஐ -யின் உயர் அதிகாரி, இதனால் தான் தோனியின் கான்ட்ராக்டை எடுத்துவிட்டோம் என்று தெரிவித்தார்.

"வாஷிங்டன் சுந்தர், சாஹா போன்ற வீரர்கள் கடந்த ஆண்டு நிறைய சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவர்களுடைய பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு தோனியும் பங்கேற்காததே அவர் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்," என்றார். தோனியின் ஓய்வு பற்றி கேள்வி எழுப்பிய போது, "அந்த கேள்விக்கு பதில் தோனியிடமே உள்ளது" என்று கூறினார்.

ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் போன்ற வீரர்கள் களத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிறு தவறுகள் செய்தாலும், அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் 'தோனி, தோனி' என்ற சத்தத்தை காதுகளில் தொனிக்கப் பண்ணுகிறார்கள். அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், தோனி அதில் பங்கேற்க மாட்டார் என்று தோனியை தவிர அனைவருமே முடிவுசெய்துள்ள நிலையில், இளம் வீரர்கள் 15 ஆண்டுகள் சிறந்து விளங்கிய தோனியின் இடத்தை பூர்த்திசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பட்டியல் வெளிவந்த பிறகு ராஞ்சியில் இருக்கும் களத்தில் மீண்டும் பயிற்சியை துவங்கியுள்ளார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மீண்டும் களத்தில் இறங்கப்போகும் தோனி, ஐபிஎல் போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பொறுத்தே அவரை மீண்டும் அணியில் எடுக்கமுடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ குறிப்பிட்டுள்ள செப்டம்பர் மாதம் , டி20 உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பே முடிகிறது, எனவே டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் தோனியை எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon