மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

சிம்புவுடன் கல்யாணி: ஃப்ரெஷ் கூட்டணி!

சிம்புவுடன் கல்யாணி: ஃப்ரெஷ் கூட்டணி!

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அவர் நடித்த வேறு எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. கால்ஷீட் பிரச்னை, உரிய நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வராதது என சிம்பு மீதான புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுடன் பிரச்னை ஏற்பட்டு சில படங்கள் கைவிடப்பட்டது. இந்த சூழலில் வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப்படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்ற தகவலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் தரப்படாமல் இருந்த சூழலில் திடீரென படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மீண்டும் திரைப்படத்தைத் துவங்குவதாக படக்குழுவினர் அறிவித்த பின்னர் படத்தின் பிற அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பை முடிவிற்குக் கொண்டுவந்து ஆறுதல் அளிக்கும் விதமாக கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

சிம்பு ரசிகர்களுக்கான பொங்கல் பரிசு என்பது போல நேற்று(ஜனவரி 16) ஆறு மணி முதல் தொடர்ச்சியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி மாநாடு திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல், கலை இயக்குநராக சேகர் போன்றோரும் பணிபுரிய இருப்பதாகவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

அத்துடன் படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுடன் ஜோடி சேர்கிறார் என்னும் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் கல்யாணி தொடர்ந்து நடித்துவருகிறார். சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் அவர், தமிழில் தனக்கு பெரிய ஓப்பனிங் இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதோடு படத்தில் கல்யாணிக்கும் தனது திறமையை வெளிப்படுத்த பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நிலையில் தான் உடனடியாக சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய படங்கள் போன்ற பிரச்னைகளில் மாட்டாமல் சிம்புவின் மாநாடு திரைப்படம், அவருக்கும் கல்யாணிக்கும் திரைவாழ்க்கையின் திருப்புமுனையாக அமையுமா என்ற

எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது