மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

மீண்டு வரும் இந்தியா

மீண்டு வரும் இந்தியா

இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாம் ஒருநாள் போட்டி, இன்று ராஜ்கோட், சவ்ராஷ்டிர மைதானத்தில் மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாம் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலாம் போட்டி என்பதால் அதிக விமர்சனங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் பும்ரா போன்ற சிறந்த பவுலருக்கு இந்த வகையான தோல்வி பெரும் பின்னடைவையும், மிகவும் நிதானமாக செயல்பட வேண்டிய சூழலையும் கொடுத்திருக்கிறது. காரணம், இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்கநேரிடும்.

யுவராஜ் சிங் போனபிறகு நான்காவது இடத்தில் இறங்கும் எந்த பேட்ஸ்மேனாலும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கமுடியவில்லை. எனவே, இந்தப் போட்டியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கப்போவது யார் என்ற கேள்வியும் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.  சென்ற போட்டியில் விராட் கோலி நான்காவது இடத்தில இறங்கியது முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் வரவேற்கப்படவில்லை.  மேலும் பந்துவீச்சில் சிறந்துவிளங்கும் இந்திய அணியால், ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாதது, ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றதா அல்லது இந்திய அணியின் கவனமின்மையை காட்டுகிறதா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. முதல் போட்டியில் பல சாதனைகளைப் படைத்தது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால், தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியை, இந்திய மண்ணில் அதிக முறை வென்ற பெருமையை பெரும்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தலையில் ஏற்பட்ட காயம் காரணத்தால் இந்த போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் இடத்தில் சென்ற போட்டியின் போது செயல்பட்டது போலவே, இந்தப் போட்டியிலும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் போலவே, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய நவ்தீப் சைனி இன்று களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon