மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

ஆஸ்திரேலியாவை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்!

ஆஸ்திரேலியாவை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் இரண்டாம் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே முன்னிலை வகிக்கின்ற நிலையில், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.

துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் 81 ரன்களை சேர்த்தனர். 42 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேறினார். ஷிகர் தவன் தன்னுடைய 24ஆவது சர்வதேச சதத்திற்கு வெறும் 4 ரன்களே தேவைப்பட்ட நிலையில் ரிச்சர்ட்சன் வீசிய 29ஆவது ஓவரில், ஸ்டார்க் இடம் கேட்ச் ஆகி 96 ரன்களில் வெளியேறினார். மூன்றாவது இடத்தில் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, பொறுப்புடன் விளையாடி 78 ரன்களில் வெளியேறினார்.

நான்காவது பேட்ஸ்மேனாக யார் களமிறங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவது இடத்தில் இறங்கி வெறும் 7 ரன்களே சேர்த்து வெளியேறினார். மனிஷ் பாண்டேவும் 2 ரன்களில் வெளியேற, காயம் காரணமாக ரிஷப் பண்ட் இல்லாததால் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டுவதற்கு பேட்ஸ்மேன் இல்லை என்று நினைத்த நிலையில், கே.எல்.ராகுல் 80 ரன்களை வெறும் 52 பந்துகளில் எடுத்து, தன்னால் எந்த ஆர்டரிலும் விளையாட முடியும் என்று நிரூபித்துள்ளார்.

களத்தில் ஜடேஜா (20) மற்றும் ஷமி(1) நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 340 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வலுவான டார்கெட்டைக் கொடுத்திருக்கிறது.

முதலாம் ஒருநாள் போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள், இந்த முறை இந்திய பேட்ஸ்மேன்களால் சிதறடிக்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஸாம்பா(3) மற்றும் ரிச்சர்ட்சன்(2) தவிர வேற எந்த பவுலர்களும் விக்கெட்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சிற்கு வலிமை சேர்க்கும் விதத்தில், இளம் வீரான நவ்தீப் சைனி களமிறங்கவுள்ளார். சுழற் பந்துவீச்சாளர் சஹாலுக்கு பதிலாக இவர் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன், முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான, டேவிட் வார்னர் மற்றும் ஆரன் ஃபின்ச் களமிறங்கினார்கள். இரண்டு பவுண்டரிகள் அடித்து ஆட்டத்தைத் தொடங்கிய வார்னர், ஷமி வீசிய நான்காவது ஓவரில் மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் ஆகி, வெறும் 15 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 6 ஓவர்கள் முடிவில், 30 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச்(6) மற்றும் ஸ்டீவ் ஸ்மித்(2) விளையாடி வருகின்றனர்.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon