மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

ரொமான்ஸுக்குத் திரும்பிய பிரபாஸ்

ரொமான்ஸுக்குத் திரும்பிய பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்திற்கு ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

“ஜான்” என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. கோபிசந்த் நடிப்பில் 2௦15ல் வெளியாகி வெற்றி பெற்ற ஜில் திரைப்படத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ண குமார் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ஜான். ஜில் படத்தை தயாரித்த அதே யூவி கிரியேஷன் தயாரிப்பு நிறுவனம் இத்திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

பாகுபலி வெற்றி பிரபாஸுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தித் தந்தது. அதை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வருடம் சஹோ வெளியானது. ஆனால் கலவையான விமர்சனங்களை பெற்று, எதிர்பார்த்த வெற்றி பெறாமல் பாக்ஸ் ஆஃபிஸில் சுருண்டு ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இதன்பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்புக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ஜான் பட அறிவிப்பு பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜான் படத்திற்காக பிரபாஸ், பாகுபலி, சஹோ படங்களுக்காக பராமரித்து வந்த உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். முழுக்க முழுக்க காதல் படமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடபெற இருக்கிறது. கதாநாயகியாக மிஷ்கினின் முகமுடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர் சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த அலா வைகுந்தபுரம்லோ என்ற தெலுங்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரவீந்தர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.

மேற்கொண்டு பிரபாஸின் ஜான் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், மற்றும் பணியாற்றவிருக்கும் டெக்னிஷியன்கள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon