மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வீழ்ந்த மனிதனின் எழுந்த கதை!

வீழ்ந்த மனிதனின் எழுந்த கதை!

நடிகர் விஷ்ணு விஷால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், அவை என்ன பிரச்சினைகள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், அத்தனைப் பிரச்சினைகளையும் ரசிகர்களின் முன்பு வெளிப்படையாக கூறியிருக்கிறார். ‘அவங்களுக்கு என்னப்பா கவலை; சினிமாகாரங்களாச்சே’ என்றொரு சொல் கோடம்பாக்கத்தில் அவ்வப்போது ஒலிக்கும். சினிமாகாரங்களாக இருந்தாலும், அவர்களும் மனிதர்கள் சந்திக்கும் எந்தவொரு பிரச்சினைகளிலிருந்தும் விலக்கு பெற்றவர்கள் இல்லை என்பதை அவ்வப்போது நடைபெறும் சில சம்பவங்களால் அறிந்துகொள்ளலாம். அப்படித்தான் விஷ்ணு விஷாலின் வாழ்க்கையில் நடைபெற்ற சில பிரச்சினைகளை ட்விட்டர் பக்கத்தில் கடிதமாக எழுதியிருக்கிறார் விஷ்ணு. அந்தக் கடிதத்தின் தமிழ் வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அன்புள்ள ரசிகர்களுக்கு...

நான் என்னைப் பற்றிய சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை பலரைப் போலவும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், கடைசி இரண்டு வருடங்கள் மிகுந்த கடினமான ஒன்றாகவும், இருள் நிறைந்த பகல்களும், இரவுகளும் நிறைந்ததாக இருந்தது. அவற்றைப் பற்றிப் பேசவேண்டிய நேரம் இதுவென கருதுகிறேன்.

என்னுடைய சினிமா வாழ்க்கையில் எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தபோது, என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை சீரழிந்தது. 2017ஆம் வருடம், நானும் என் மனைவியும் 11 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த வாழ்க்கையை முறித்துக்கொண்டோம். இரண்டு வீடுகளில் வாழ்ந்தது மட்டும் எனக்கு ஏற்பட்ட துயரமல்ல; பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த என் மகனையும் நான் பிரிய நேர்ந்தது. நான் உடைந்துபோனேன். என் வாழ்க்கை இப்படி மாறும் என நினைத்ததே இல்லை. குடிகாரனாக மாறினேன். ஒவ்வொரு இரவும், நான் உடைந்துபோகும் வரை குடித்தேன். அந்த நாட்கள் மோசமாக மாறின. மன அழுத்தமும் தூக்கமின்மையும் என்னை உடலளவில் நோயாளியாக மாற்றியது. சிறு அறுவை சிகிச்சையும் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளை சீர் செய்ய முயன்றபோது, என் வேலையின் அழுத்தம் என்னை கீழே தள்ளியது. மோசமான நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். நான் உருவாக்கியிருந்த தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது. அதனால் பண நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் என் சொந்த தயாரிப்பில் தயாரான திரைப்படத்தை 21 நாள் ஷூட்டிங்குக்குப் பிறகு கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் விட, பிரபு சாலமன் இயக்கத்தில் நான் நடித்த ‘காடன்’ திரைப்பட ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கி இரண்டரை மாதம் கட்டிலில் கிடந்தேன். அதனால் 11 கிலோ எடை அதிகமானேன்.

சூழ்நிலைக் கைதியாக மாறி எதுவுமே சரியாக இல்லாமல் இருந்தது. ராட்சஸன் இல்லாமல் எட்டு சிறந்த இயக்குநர்களுடன் இணையக் காத்திருந்த கதைகள் என் கையைவிட்டுச் சென்றன. விவாகரத்து, குழந்தையிடமிருந்து பிரிந்தது, உடல் நோய், பண நெருக்கடி, காயம், குடி, உணவுப் பிரச்சினை மற்றும் என் எடை கூடியது என அடி மட்டத்துக்குச் சென்றுவிட்டேன். உதவ யாருமில்லாமல் ஏதோ ஒரு உலகத்தில் கிடப்பது போல இருந்தேன். அதனால், என் அப்பா ரிட்டையர் ஆனது கூட தெரியாமல் போனது. என் பிரச்சினைகளில் நான் உழன்று கொண்டிருந்தது என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தையை எப்படி பாதித்தது என்பதை நான் கவனிக்கவில்லை. அவரது கையறு நிலையைக் கண்டபோது என் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

உதவி கேட்டுச் சென்றேன். மன அழுத்தத்தை சரிசெய்ய சிகிச்சை மேற்கொண்டேன். எனக்குள் ஒரு சக்தி கிடைக்க உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். சத்தான உணவுகளை உண்ணத் தொடங்கினேன். குடியை நிறுத்தினேன். யோகா செய்யத் தொடங்கினேன். முன் முடிவுகளோடு பழகுபவர்களை வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவைத்தேன். எதிர்மறையாக சிந்திப்பவர்களை பிளாக் செய்தேன். வீட்டில் இருப்பவர்களுடன் அதிகநேரம் செலவிட்டேன். நேர்மறை எண்ணமுடைய நண்பர்களுடன் மட்டும் பழகத் தொடங்கினேன்.

காயம் ஏற்பட்ட பிறகு, உடற்பயிற்சி செய்யவே கூடாது என்று சொன்னார்கள். ஆனால், நான் ஜிம்முக்குப் போனேன். முதல் நாள் என்னால் ஒரு புஷ்-அப் கூட எடுக்கமுடியவில்லை. ஆனால், 6 மாதம் கழித்து இப்போது 16 கிலோ எடை குறைவாக வலிமையாக எனது அடுத்த நான்கு படங்களுக்குத் தயாராகிவிட்டேன்.

என் உடலில் உருவாக்கிய சிக்ஸ் பேக்குகளை காட்டுவதற்காக நான் இந்தப் பயணம் பற்றிக் குறிப்பிடவில்லை. என் தலையில் ஒரு ஆறு பேக்ஸ் உருவாகியிருக்கிறது. அந்த ஆறும் அறிவாக செயல்பட்டு என்னைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. என்னைப் போலவே கஷ்டப்பட்டுக்கொண்டு பலர் இருக்கலாம். உங்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது ஒன்று தான். நாம் எப்போது வேண்டுமானாலும் திரும்பி எழலாம். நேர்மறையான சிந்தனைகளும், ஒழுக்கமும் உங்களைக் காப்பாற்றும். கோபத்தையும், விரக்தியையும் சரியான பாதையில் செலுத்தி உங்களை மனதளவிலும், உடலளவிலும் சரிசெய்யுங்கள். உடல் வலிமை எப்போதும் மன வலிமையை மேம்படுத்தும். என்னுடைய அடிமட்டத்திலிருந்து எழுந்துவந்த நான் இதை தனிப்பட்ட முறையில் உணர்ந்தவன். என் எதிர்காலம் எனக்கு என்ன வைத்திருக்கிறது என எனக்குத் தெரியாது. ஆனால், என் உடலையும் மனதையும் எப்போதும் என் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பேன். என்னுடன் பழகும் நேர்மறையான சிந்தனையுள்ளவர்களைக் கொண்டாடி அவர்களை மதிப்பேன்.

இந்த இரண்டு வருடத்தில் நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது, நிறைய பேர் உங்களை மதிப்பீடு செய்து கீழே இழுக்கப்பார்ப்பார்கள். எப்போதும் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் உங்கள் மனதுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர். நீங்கள் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் சிலரது உங்கள் மீதான பார்வை எப்போதும் மாறாது. அவர்களுக்கெல்லாம் நீங்கள் கொடுக்கக்கூடிய ஒரே பதில், உங்களது சிறப்பான திறமைகளை வெளிக்காட்டி உங்களை புதிய மனிதனாக அடையாளப்படுத்துவது தான். உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல்நலனையும், அமைதியான மனதையும் கொடுக்க அந்த கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இதுவரை என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொள்கிறேன். நாம் இதை ஒன்றாக இணைந்து செய்திருக்கிறோம். நன்றி.

-விஷ்ணு விஷால்.

மேலேஇருக்கும் கடிதத்தின் மூலம், எத்தனைப் பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து வெளியே வர சுயமான உடல் மற்றும் மனக் கட்டுப்பாடும், அதனை மேலும் அதிகரிக்கும் நேர்மறை சிந்தனை உள்ளவர்களை அருகில் வைத்துக்கொள்வதும் எத்தனை முக்கியம் என்பதை விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், உங்களை நம்பும் நபர்களை அருகில் வைத்திருக்கவேண்டியதன் அவசியம் என்ன என்பதையும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டிருக்கிறார். மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமல்லவா...

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon