மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

இந்திய அணிக்குக் கிடுக்கிப்பிடி!

இந்திய அணிக்குக் கிடுக்கிப்பிடி!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாம் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தற்போது முன்னிலை வகிக்கிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். அடுத்த விக்கெட்டுக்கு தவன் மற்றும் ராகுல் இணைந்து 121 ரன்களைச் சேர்க்க, அதன் பிறகு களமிறங்கிய எட்டு பேட்ஸ்மேன்களும் இணைந்து வெறும் 134 ரன்களையே சேர்த்தனர். 255 ரன்களுக்கு கடைசி ஓவரில் ஆல்-அவுட் ஆனது இந்தியா. அதிகபட்சமாக ஷிகர் தவன் 74 ரன்களை எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் பந்துவீசிய அனைவருமே விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஜம்பா மற்றும் ஆகர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பண்டிற்குப் பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட, தனது பவுலிங்கைத் தொடங்கியது இந்திய அணி.

256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (128) மற்றும் ஆரன் ஃபின்ச் (110) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 38ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

வார்னர், ஃபின்ச் இருவரும் இணைந்து 258 ரன்களைச் சேர்த்தனர். அதில் 35 பவுண்டரிகளும் அடங்கும். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த பட்டியலில் முதல் மூன்று இடத்திலும் டேவிட் வார்னர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 128 ரன்களை எடுத்த டேவிட் வார்னருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை எதுவும் இழக்காமல் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறை ஆகும். கடைசியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் இந்தியா இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. இந்தச் சாதனையை செய்த முதல் அணி ஆஸ்திரேலியா. அதுமட்டுமின்றி இது இந்திய அணிக்கு வான்கடே மைதானத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வி ஆகும்.

போட்டியைக் குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “அனைத்து வகையிலும் மோசமாக விளையாடிவிட்டோம். அதுவும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியுடன் செய்யும் சிறு சிறு தவறுகள் பெரிய விளைவைக் கொண்டுவரும். ஆட்டத்தை வேறு பாதையில் கொண்டுசெல்லக் கூடிய வாய்ப்புகள் இருந்தும், அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாமல் போனோம். கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராகச் சிறப்பாக ஆடிவருவதால், நான் நான்காவது இடத்தில் களமிறங்க முடிவு செய்தேன். ஓர் ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் யாரும் பதற்றப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அணியைக் களமிறக்கினேன்” என்றார்.

வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரன் ஃபின்ச், “போட்டியின் இடைப்பட்ட ஓவர்களில் தவன் மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி காட்டும்போது, சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவந்தோம். டேவிட் வார்னர் தற்போது இருந்துவரும் ஃபார்மில் அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி இந்தியாவை வீழ்த்துவது எப்போதுமே சுலபமாக இருந்தது கிடையாது. அவர்கள் மீண்டும் வெற்றிபெற போதிய முயற்சிகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020