மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 ஜன 2020

கரும்பிலே கலைவண்ணம் காணும் ராமதாஸ்

கரும்பிலே கலைவண்ணம் காணும் ராமதாஸ்

புள்ளிவிவர அறிக்கைகள், தேடியெடுக்கும் செய்தித்திரட்டு அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதேபோல இரு வருடங்களாக தைலாபுர பொங்கல் கொண்டாட்டத்தையும் கவனம் ஈர்க்கும் கலை நுட்பத்தோடு செய்துவருகிறார் அவர்.

தைலாபுரம் தோட்ட இல்லத்தில் 1999ஆம் ஆண்டில் தொடங்கி 20 ஆண்டுகளாக பொங்கல் விழாவை சிறப்பு விழாவாக கொண்டாடி வருகிறார் ராமதாஸ். கடந்த ஆண்டு நடைபெற்ற 2ஆவது தைக்கூடல் விழாவின் சிறப்பு அம்சமாக கரும்புக் கட்டுகளை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டியும், அதை கம்பீரமாக இழுத்துச் செல்லும் இரு காளை மாடுகளும் கரும்புகளாலேயே வடிவமைக்கப்பட்டு இருந்ததுதான்.

பொதுவாக இத்தகைய காட்சிகள் வடிவமைக்கப்படும் போது உருவத்தை அழகுபடுத்துவதில் தான் கலைஞர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால், இந்த பொங்கல் புதுக்காட்சியை வடித்த சிற்பி சிவா, அதையும் கடந்து காளைகள் மின்னல் வேகப் பாய்ச்சலில் மாட்டு வண்டியை இழுத்துச் செல்வது போன்ற தோற்றத்தை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்திருந்தார்.

இதைக் குறிப்பிட்டு சிலாகித்திருந்த டாக்டர் ராமதாஸ், “ தைலாபுரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கரும்புகளால் ஆன காளைமாட்டு வண்டி அமைப்பை அனைத்து ஊடகங்களும் பாராட்டின. அடுத்த 6 மாதங்களுக்கு தைலாபுரம் தோட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த படைப்பை பல்லாயிரம் பேர் நேரில் பார்த்துச் சென்றனர்; பல லட்சம் பேர் இணைய ஊடகங்களிலும், முகநூலிலும் கண்டு களித்தனர். கடந்த ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு வியப்பை அளித்தது என்றால் இந்த ஆண்டு 21-ஆவது ஆண்டு தைக்கூடலுக்கான படைப்பு பிரமிப்பை ஏற்படுத்தப் போகிறது.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவல் வீர விளையாட்டின் போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையை வெற்று மார்புடன் பாயும் வீரத்தமிழ் இளைஞர்கள் அடக்கும் காட்சி கரும்புகளால் வடிவமைக்கப் பட உள்ளது. இதற்கான திட்டங்களை வகுத்துள்ள தம்பி சிற்பி சிவா அவரது குழுவினருடன் கலைப் பணியை தொடங்கி விட்டார். இன்னும் 4 நாட்களில் கரும்புக்காளை சீறிப் பாயும்; அது உங்களின் கண்களுக்கு வீர விருந்து படைக்கும். அக்காளையைக் காண நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

சொன்னதுமாதிரியே இன்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பொங்கல் விழாவில் வாடி வாசலில் இருந்து துள்ளி வரும் ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் அடக்குவதை சித்தரிக்கும் வகையில் கரும்புகளால் செட்டிங் அமைக்கப்பட்டிருந்தது.

டாக்டர் ராமதாஸ், அவரது துணைவியார் சரஸ்வதி அம்மையார், பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் பொங்கல் கிண்டிக் கொண்டாடினர். கடந்த ஆண்டைப் போலவே கரும்புச் சிற்பி சிவாவின் இந்தக் காட்சியும் தைலாபுரம் தோட்டத்தில் இன்னும் சில மாதங்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் அடுத்த படத்தில் ஏற்பட்ட புதிய சிக்கல்

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

3 நிமிட வாசிப்பு

ரங்கன் வாத்தியார் கேரக்டருக்கு முதலில் ஒப்பந்தமான நடிகர்!

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி ...

3 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் கேட்கும் சம்பளம்.. தயாரிப்பு தரப்பு இறங்கி வருமா ?

புதன் 15 ஜன 2020