மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

மீண்டும் தமிழில்: ‘சண்டகாரி’ ஸ்ரேயா

மீண்டும் தமிழில்: ‘சண்டகாரி’ ஸ்ரேயா

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஸ்ரேயா தமிழில் நடிக்கும் சண்டகாரி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

‘எனக்கு 20 உனக்கு 18’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அவர் நடித்த மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி போன்ற திரைப்படங்கள் பெரும் ரசிகர் கூட்டத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. இந்தி, தெலுங்கு, கன்னடம் எனத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவர், தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் சண்டகாரி மற்றும் நரகாசுரன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்துவருகிறார்.

இந்த நிலையில் மாதேஷ் இயக்கத்தில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள சண்டகாரி திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று (ஜனவரி 14) வெளியானது. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மை பாஸ்’. அந்தத் திரைப்படத்தின் ரீமேக்காக ‘சண்டகாரி’ திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் திலீப் - மம்தா மோகன்தாஸ் நடித்த வேடங்களில் தமிழில் விமல் - ஸ்ரேயா நடித்துள்ளனர்.

தனியார் கம்பெனியின் ஸ்ட்ரிக்ட் பாஸான ஸ்ரேயாவுக்கும், அவரை அதிகம் வெறுக்கும் அவரது வேலையாள் விமலுக்கும் இடையேயான சுவாரஸ்யமான கதையாக சண்டகாரி திரைப்படம் அமைந்துள்ளது.

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ரொமான்டிக் காமெடி திரைப்படமான இதில் பிரபு , சத்யன், கே.ஆர்.விஜயா, ரேகா, மகாநதி சங்கர், உமா பத்மநாபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon