‘நன்றியும் மன்னிப்பும்’: அசுரன் விழாவில் வெற்றிமாறன்

entertainment

அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டத்தில் இயக்குநர் வெற்றிமாறன் திரைப்படம் குறித்தும் தனுஷ் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் திரைப்படம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வெளியானது. தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கென் கருணாஸ், அம்மு அபிராமி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், டி.ஜே. அருணாசலம், பசுபதி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பெரும் பாராட்டுகளையும் வசூலையும் குவித்த அசுரன் திரைப்படத்தின் நூறு நாள் நிறைவு விழா கொண்டாட்டம் நேற்று (ஜனவரி 13) நடைபெற்றது.

இந்த விழாவில் தனுஷ், வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு மற்றும் அசுரன் படத்தில் பங்காற்றிய படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அசுரன் வெற்றி விழா மேடையில் இயக்குநர் வெற்றிமாறன் உரையாற்றும்போது, “நூறு நாட்கள் தினமும் ஓடிய ஒரு படத்தில் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இது தமிழ் நிலம், தமிழ் மக்களின் இன்றைய வெளிப்பாடாக உள்ளது. மக்களின் ஒற்றுமைக்கான தேவையாகத் தான் இந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி அமைந்திருக்கிறது. பாலு மகேந்திரா சார் சொல்வது போன்று வணிக ரீதியான வெற்றி என்பது ஒரு விபத்துதான். அதை நாம் நிகழ்த்த முடியாது. அதுவாகவே நிகழும்.

பொதுவாக எனக்கு விருப்பமில்லாத ஒன்றை எனக்கு அழுத்தம் கொடுத்து யாராலும் செய்ய வைக்க முடியாது. அந்த விதத்தில் அனைவருக்கும் கஷ்டங்கள் இருந்தன. இந்தப் படத்தை வெற்றியடையச் செய்ததற்கு ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அனைவரும் படத்தைக் கொண்டாடினார்கள். படத்தில் இருந்த குறைகளையும் மீறி எங்களது உழைப்புக்காகவும், படைப்புக்காகவும் நிறைகளை மட்டுமே பேசினீர்கள். என்னுடைய முதல் நன்றி ஊடகங்களுக்குத் தான்.

நான் மிகவும் கோபப்படுவேன். என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் நான் எனது உதவியாளர்களிடம் ‘நான் உங்களிடம் கோபப்படுவேன். அதற்கு உங்களுடைய தவறு காரணம் அல்ல. எனது இயலாமை சில நேரங்களில் உங்களிடம் கோபமாக வெளிப்படும். அதற்காக மன்னித்துவிடுங்கள்’ என்று கூறுவேன். 2003ஆம் ஆண்டு முதல் தனுஷுடன் இணைந்து பணியாற்றினாலும் இது எங்களுக்கு முக்கியமான படைப்பு. தனுஷ் எப்போதுமே இயக்குநரின் நடிகராக இருப்பார். எனக்கு இந்தப் படத்தின் மீது இருந்ததைவிட தனுஷுக்கு அவரது கதாபாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை மிக அதிகமாக இருந்தது. இந்த வேடம் அவர் செய்ததால் மட்டுமே இப்படி அமைந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களும் எங்கள் உடன் இருந்து அனைத்து விதமான சுதந்திரத்தையும் அளித்ததோடு ஊக்கமும் தந்தார். கதாநாயகி மஞ்சு வாரியர் குறித்துக் கூற வேண்டும் என்றால், இந்த அளவுக்கு மனப்பூர்வமாக வேலை செய்யக்கூடிய ஒரு நடிகையை நான் பார்த்ததே இல்லை” என்று கூறினார்.

மேலும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *