மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஏப் 2020

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் நான்கு கேமரா?

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் நான்கு கேமரா?

சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கொண்டு வர இருக்கும் புதிய ஸ்மார்ட்ஃபோன் சீரிஸின் பெயர் எஸ் 20 பிளஸ் (S20+). இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்ஃபோன்கள் அதிகபட்சமாக மூன்று கேமராக்கள் வரைதான் பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்ஃபோன், நான்கு கேமராக்களுடன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்கள், தற்போது 'xda-developers'(எக்ஸ்டிஏ- டெவலப்பர்ஸ்) என்ற இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் டெக்னாலஜி பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சாம்சங் நிறுவனம், ஜியோமி நிறுவனம் வெளியிட்ட 108 மெகா பிக்ஸல் கேமராவுக்கு போட்டியாக அதிக மெகா பிக்ஸல் கொண்ட கேமராவை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் புகைப்படம் அதுவாகக் கூட இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவிவருகின்றன.

இது குறித்து 'xda-developers' வெளியிட்டுள்ள தகவல்களில் இதனுடைய புகைப்படங்கள் முகாந்திரம் இல்லாத ஒரு நபரிடமிருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்ஃபோனுடய அம்சங்கள் சிலவற்றை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்ஃபோனில், 12 மெகா பிக்ஸல் 1.8μm (ம்யு மீட்டர்) எனப்படும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சாரை சோனி நிறுவனம் ஏற்கனவே தயாரித்தும் வெளியிடாமல் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சென்சாரில் 30 மடங்கு ஜூம் செய்யக்கூடிய 'அல்ட்ரா ஜூம்' திறன் படைத்த டெலிபோட்டோ லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த கேமரா உதவியுடன் 8K, 30fps (Frames Per Second) மற்றும் 4K, 60fps (Frames Per Second) என்ற தரத்தில் வீடியோக்களை பதிவு செய்துகொள்ள முடியும். அத்துடன் ஸ்லோ மோஷன் வீடியோவையும் பதிவுசெய்துகொள்ள முடியும்.

செல்பி எடுக்கும் போது திரையில் இருப்பவர்களுக்கு ஏற்ற வகையில் கேமரா அளவை தானாகவே அட்ஜஸ்ட் செய்துக்கொள்ளும் ஸ்மார்ட் செல்பி மற்றும் தொடர்ச்சியாக எடுக்கும் படங்களை வீடியோவாக மாற்றும் சிங்கிள் டேக் என்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் xda- developers வெளியிட்ட தகவல்களின் வாயிலாக நமக்கு தெரியவருகிறது.

ஆனால் இதனை பற்றி சாம்சங் நிறுவனம் எந்த ஒரு அதிகாரப் பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் சாம்சங் வெளியிடப்போகும் புதிய ஸ்மார்ட்ஃபோன் பற்றிய சின்னதொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. எனவே, இதைப்பற்றிய தகவல்கள் சாம்சங் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon