மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

அவார்ட் கமிட்டியை விமர்சித்த பிரபலங்கள்!

அவார்ட் கமிட்டியை விமர்சித்த பிரபலங்கள்!

தங்கள் படைப்புகளுக்கு விருது வழங்கப்படாதது குறித்து இயக்குநர் பார்த்திபன் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் விருது வழங்குபவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் பார்த்திபனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த ஒத்த செருப்பு சைஸ் ஏழு திரைப்படம், படைப்பு ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது. ஒரே ஒரு நடிகர் மட்டும் முழு நீள திரைப்படத்தில் நடித்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் சென்றது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் திரைத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்காகவும், இரு தேசிய விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் நடந்த விருதுவழங்கும் விழா ஒன்றில் ‘ஒத்த செருப்பு சைஸ் ஏழு’ திரைப்படத்திற்கு விருது வழங்கப்படவில்லை. இதனைச் சுட்டிக்காட்டிய இயக்குநர் பார்த்திபன் வருங்காலங்களில் அவர்கள் அளிக்கும் விருதுகளைப் புறக்கணிக்கப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சிறந்தப் படமே எடுத்தாலும், அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் தான் இந்த முடிவை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதே போன்று பிரபல இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் விருது வழங்கும் குழுக்களைக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்து சமீபத்தில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் ‘வெள்ளாட்டு கண்ணால’ மற்றும் ‘கோடி அருவி’ போன்ற பாடல்களை இப்போதும் ரசிகர்கள் மிகவும் விரும்பி தேடிக் கேட்கின்றனர். இருப்பினும் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் பாடல்கள் எந்தவொரு இசை விருதுகளிலும் சேர்க்கப்படவில்லை.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அவர், ‘மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் எந்த இசை விருது விழாவிலும் பரிந்துரைக்கப்படவில்லை என்பது எனக்கு ஒரு விஷயத்தைக் கற்பித்துள்ளது. விருது விழா கமிட்டிகளை விடவும் இசைப் பிரியர்கள் அதிக இசை ரசனை உள்ளவர்கள் . இந்த 2020-ஆம் ஆண்டும் இசை ரசிகர்களின் அன்பு மற்றும் உறுதுணையோடு இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விருது வழங்கும் விழாக்கள் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருவது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon