மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 5 ஆக 2020

விஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்!

விஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்!

நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் ரசிகர்கள் கொண்டாடி வருவது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குணச்சித்திர நடிகராக சிறு சிறு வேடங்களில் நடித்து, தனது கடின முயற்சியால் தற்போது கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தான் ஒரு நடிகர் என்ற எந்த ஒரு வேறுபாடும் காட்டாமல் பொதுமக்களோடு நெருங்கிப்பழகக் கூடியவர். இது அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத்தந்தது. ‘மக்கள் செல்வன்’ என்று அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஜனவரி 16-ஆம் தேதி வருகிறது. அவரது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடும் முயற்சியில் அவரது ரசிகர்கள் இறங்கியுள்ளனர்.

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக சாலிகிராமத்தில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை போன்ற பரிசோதனைகளும், ரத்த தான முகாமும் நடைபெற்றது. மேலும் விழாவின் சிறப்பு அம்சமாக அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஏழு பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை அளிக்கவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒருவருக்கு இன்றைய தினமே இலவச கண் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கோவை விஜய்சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக அரசு மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. அத்துடன் பிரசவ வார்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பழங்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது.

விஜய் சேதுபதி ரசிகர்களின் இந்த வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon