மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

சர்ச்சைகளை உருவாக்கும் விஷ்ணுவின் எஃப்.ஐ.ஆர்!

சர்ச்சைகளை உருவாக்கும் விஷ்ணுவின் எஃப்.ஐ.ஆர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. விஷ்ணு தயாரித்து நடிக்கும் இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்குகிறார். பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, இயக்குநர் கௌரவ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷாலின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ஃபர்ஸ்ட்-லுக்கில், முதல் முறையாக அவர் சிக்ஸ்-பேக்குடன் தோன்றி இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் ‘தீவிரவாதம் தொடர்பான திரைப்படமாக இருக்கலாம்’ என்று அந்த ட்விட்டர் பதிவிலேயே விவாதம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த வருடம் ஜூலை 16ஆம் தேதி இதன் மோஷன் போஸ்டரை அனிருத் வெளியிட்டிருந்தார். அதில் எஃப்.ஐ.ஆர் என்ற டைட்டிலுக்கு, ‘பைசல் இப்ராஹிம் ரைஸ்’ என்ற பெயர் விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேவேளையில் திரைபடத்தின் தயாரிப்பாளராக முதலில் ஆனந்த் ஜாய் இருந்தார். தற்பொழுது அவர் விலகி விஷ்ணுவே திரைப்படத்தை தன் சொந்த பேனரில் தயாரித்து வழங்கி இருக்கிறார். சில சர்ச்சைகளை ஏற்படுத்தும் காட்சி படத்தில் இருந்ததால் தான் இந்த விலகலும், புதிய பொறுப்பு ஏற்பும் நடைபெற்றது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. பர்ஸ்ட் லுக்குடன் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டீசர் வெளியாகும் என்ற கூடுதல் தகவலும் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தத் திரைப்படம் சர்ச்சைகளை எதிர்கொள்ளப்போவது உறுதி என்ற எண்ணத்துடன் சர்ச்சைகளை சமாளிக்க தயாராகி வருகிறது கோடம்பாக்கம்.

நடிகர் விஷ்ணு, வெண்ணிலா கபடிக் குழு மூலமாக அறிமுகமானவர். தேர்ந்த கதைகளை தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்து கொண்டார். ஒரு வருட இடைவேளைக்குப் பிறகு நடிக்கும் திரைப்படம் எப்.ஐ.ஆர் என்பதாலும், விஷ்ணு எடுத்துக்கொண்ட இந்த காலம் அவரை சிக்ஸ் பேக்குடன் காட்டிக்கொள்ள தேவைப்பட்டிருக்கும் என்றும் ரசிகர்கள் சமாதானப்படுத்திக்கொண்டனர்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon