மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பயணத்தை நிறுத்திய பொன்னியின் செல்வன்!

பயணத்தை நிறுத்திய பொன்னியின் செல்வன்!

மணிரத்னம் இயக்கத்தில் இந்திய சினிமாவின் பெருமையான திரைப்படமாக உருவாகிவருகிறது பொன்னியின் செல்வன். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கும், அமரர் கல்கி அவர்களின் எழுத்துக்கும் நேர்மையாக இருந்துவிட்டால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். இந்த ரிசல்ட் தெரிந்ததால்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு மாதத்துக்கும் மேலாக ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பலர் தாய்லாந்தில் நடைபெற்ற முதல்கட்ட ஷூட்டிங்கில் நடித்தனர். இப்போது முதல்கட்ட ஷூட்டிங் முடிந்து, அனைவரும் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டனர்.

இரண்டாவது கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெறுவதால், சென்னைக்கு வெளியே மிகப்பெரிய பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு திரைப்படம் தொடர்பான திட்டமிடல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை மேற்கொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். முடிந்தளவுக்கு ஓய்வெடுத்துவிட்டு வரச்சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் மணிரத்னம். ஆனால், இடையிலிருக்கும் இந்த நாட்களில் ஓய்வெடுக்காமல் தனது அடுத்த படத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லிவிட்டார் நடிகர் விக்ரம்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஷூட்டிங்குக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. இரவு, பகல் எனத் தொடர்ந்து ஷூட்டிங் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறது படக்குழு. அடுத்த ஷெட்யூலை மணிரத்னம் தொடங்குவதற்குள் கோப்ரா திரைப்படத்தின் இரண்டு ஷெட்யூல்களை முடித்துவிட வேண்டும் என விக்ரம் சொல்லியிருக்கிறார் என்கின்றனர் படக்குழுவினர்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon