மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 19 ஜன 2021

நீதிப் போராட்டம்: மிஷ்கினும், 50 லட்சமும்!

நீதிப் போராட்டம்: மிஷ்கினும், 50 லட்சமும்!

ஜனவரி 24ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் மிஷ்கினின் “சைக்கோ” படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தயாரிப்பாளர் ரகுநந்தன் என்பவர் மிஷ்கின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரகுநந்தன் கொடுத்த புகாரில் “என்னுடைய மகனை வைத்து, சைக்கோ திரைப்படம் எடுப்பதாக முதலில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த மிஷ்கின் ஒரு கோடி சம்பளம் பெற்றுக்கொண்டார். ஆனால், அதே கதையை டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உதயநிதியை வைத்து இயக்க முடிவு செய்தார். தொடக்கத்திலேயே இதுகுறித்து நான் கேள்வியெழுப்பியபோது, 50 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை பட ரிலீஸின்போது, தயாரிப்பு தரப்பில் கொடுக்கும் சம்பளத்திலிருந்து கொடுப்பதாக உறுதி கொடுத்தார் மிஷ்கின். ஆனால், இப்போது பணத்தைக் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்யப்பார்க்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, “டபுள் மீனிங் புரொடக்‌ஷன் மிஷ்கினுக்கு வழங்க இருக்கும் சம்பளத்தில் இருந்து ஐம்பது லட்சத்தை பிடித்துக் கொண்டு, அதை தயாரிப்பாளர் ரகுநந்தனுக்கு வழங்கவேண்டும்” எனத் தெரிவித்து, அடுத்தகட்ட விசாரணையை 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.

24ஆம் தேதி ரிலீஸாகும் படம் தொடர்பான பணப்பிரச்சினை, 20ஆம் தேதிக்குள் தீரவில்லை என்றால் படத்தின் ரிலீஸை தடை செய்வதற்கான வழியிருக்கிறது என்ற நிம்மதியுடன் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது ரகுநந்தன் தரப்பு. ஆனால், இந்த வழக்கு தொடர்பாக புதிய புகார் ஒன்றை அளிப்பதற்காக மிஷ்கின் தரப்பு தயாராகி வருவதாக சைக்கோ படக்குழுவினரிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

பட அறிவிப்பில் தொடங்கி தற்பொழுது வரை ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியானது. சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் அவ்விரண்டு பாடல்களும் இசைப்பிரியர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ராம், நித்யா மேனன், அதிதி ராவ் நடித்து டபுள் மீனிங் புரொடக்‌ஷன் தயாரித்து, இசைஞானி இளையராஜா இசையமைத்து, மிஷ்கின் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் “சைக்கோ”.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon