மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

இளையராஜா வாழ்க்கைக் கதை படமாகிறது?

இளையராஜா வாழ்க்கைக் கதை படமாகிறது?

இசைஞானி இளையராஜா திரைத்துறைக்கு வந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவருடைய மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படத்திற்கு “ராஜா தி ஜர்னி”(Raja- The Journey) என்ற தலைப்பும் பரிசீலனையில் இருக்க, ராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவேண்டும் என யுவன் தரப்பில் விருப்பப்படுவதாகவும் தெரிகிறது.

தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர் என்பது தமிழ் ரசிகர்கள் அறிந்த செய்தி என்பதால் யுவன் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இளையராஜாவின் சகோதரரும் இயக்குநருமான கங்கை அமரன் மற்றும் அவரது மகன் இயக்குநர் வெங்கட் பிரபு வரிசையில் யுவனும் இயக்குநராக களமிறங்குவது யுவன் ரசிகர்களின் மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளது.

இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை அவரது மகனே திரைப்படமாக எடுக்க இருப்பதால், மேலும் நெருக்கமான யாரும் அறியாத ராஜா பற்றிய பல பதிவுகள் இந்தத் திரைப்படத்தில் இருக்கும் என்பதால் இளையராஜா ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியெல்லாம் இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும்போது இரட்டிப்பாகும்.

“அரவிந்தன்” திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான யுவன், அதன் பிறகு தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடல்கள் இசைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அவருடைய இசைக்கும், குரலுக்கும் உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளம். பின்னர் “ப்யார் பிரேமா காதல்” மூலமாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த யுவன், அப்பட வெற்றியைத் தொடர்ந்து மாமனிதன், ஆலிஸ் என்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon