மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

‘வெற்றியும் நானும்’: அசுரன் கொண்டாட்டத்தில் தனுஷ் நெகிழ்ச்சி!

‘வெற்றியும் நானும்’: அசுரன் கொண்டாட்டத்தில் தனுஷ் நெகிழ்ச்சி!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தத்திரைப்படம் வசூலில் சாதனை புரிந்ததோடு விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது.

மஞ்சு வாரியர், பசுபதி, அம்மு அபிராமி, கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் இன்று(ஜனவரி 13) நடைபெற்றது. படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய தனுஷ், “இது ரொம்ப அரிதாக நடக்கிற ஒரு நிகழ்ச்சி, ஒரு மைல்கல்லான நிகழ்ச்சி. எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வெற்றிமாறன் கூறியது போல இது ஒரு நன்றி தெரிவிக்கும் மேடை தான். முதலில் படத்தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு நன்றி. வெற்றிமாறனுக்கும், எனக்கும் அவர் அளித்த சுதந்திரம் தான் அசுரன் போன்ற ஒரு படைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. எனது பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் தாணு சார் எனக்கு உதவி புரிந்துள்ளார். அதை என்றுமே நான் மறக்க மாட்டேன்.

இந்தப்படத்தின் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷிற்கு எனது நன்றிகள். அதிலும் குறிப்பாக ‘வா அசுரா வா’ பாடல் இந்த படத்தின் வெற்றிக்கு 25 சதவீதத்திற்கும் மேல் பங்காற்றியுள்ளது. படம் முழுமையடைந்த நேரத்தில் நான் லண்டலில் இருந்தேன். நான் நடித்த படமாகவே இருந்தாலும் முதல்முறை அந்த இசையைக் கேட்டதும் ‘ஜிவ்வென்று’ இருந்தது” என்று கூறினார்.

மேலும் இந்தப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், மற்ற கலைஞர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அது ஒரு கனா காலம் ஷுட்டிங் நேரத்தில் அம்மாவை நெனச்சு கதறி அழுற மாதிரி ஒரு காட்சி இருந்தது. அப்போது 20 வயது இளைஞனான நான் ஒரு பிராங்க் செய்யலாம் என்னும் எண்ணத்தில் பாலுமகேந்திரா சாரிடம் அவரது உதவியாளராக இருந்த வெற்றிமாறனிடம் அந்த காட்சியை நடித்துக் காட்டக் கேட்டுக்கொண்டேன். பாலுமகேந்திரா சார் போதும் என்று சொல்லும் அளவிற்கு கத்தி அழுது நடித்துக்காட்டினார். அப்போது தான் நான் பெரிய தவறு செய்த விஷயம் எனக்குத் தெரிந்தது. அதன் அந்தக்காட்சியை நடித்து முடித்த பின்னர் யார் நடித்தது நன்றாக இருந்தது என்று பாலுமகேந்திரா சாரிடம் கேட்டபோது, ‘அவர் சிரித்துக்கொண்டே எனது இரு மகன்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறாயா?’ என்று கேட்டார். படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நான் நன்றி கூற வேண்டியது இல்லை. எவ்வளவு நெருங்கிய உறவாகவும், நண்பராகவும், சகோதரராகவும் வெற்றிமாறன் எனக்கு இருந்தாலும் நான், நன்றி கூற வேண்டிய அவசியம் இல்லாதபோதும் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு அளித்ததற்காக அவருக்கு நன்றிகள்” என்று கூறினார்.

மேலும், ‘இப்படத்தின் வெற்றியை என் அம்மா தான் முதன் முதலில் எனக்கு தொலைபேசி மூலம் கூறினார். அதனைக் கேட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். கைதி படம் பார்த்தேன் நன்றாக இருந்தது, அந்த படத்தில் கார்த்தியின் நடிப்பு ரசிக்கும் படி இருந்தது. இந்த ஆண்டும் அவருக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

திங்கள், 13 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon