மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

வரிவிலக்கு-அவார்டு: சைலண்ட் மோடில் தீபிகா

வரிவிலக்கு-அவார்டு: சைலண்ட் மோடில் தீபிகா

தீபிகா படுகோன் நடித்துள்ள சப்பாக் திரைப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி ரிலீஸாகி வெற்றிபெற்றுள்ளது. உலகமெங்கிருந்தும் சப்பாக் திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் சமயத்தில், இந்தியாவில் இந்தப் படத்திற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பின.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிவரும் ஜே.என்.யூ மாணவர்கள் மீதான கொடூரமான தாக்குதலை கண்டித்து, அவர்களை நேரில் சந்தித்தார் தீபிகா படுகோன். இதுவே அவருக்கு இத்தகைய எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது. தீபிகாவுக்கு ஆன்டி-இண்டியன் முத்திரை குத்தி, அவரது திரைப்படத்தை பார்க்கவேண்டாமென்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டிருந்தனர் பா.ஜ.கவினர். இதனைக் கண்ட மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியினர், சப்பாக் திரைப்படத்துக்கு. அதன் உள்ளடக்கத்தின் தன்மையின் அடிப்படையில் வரி விலக்கு கொடுத்து ஊக்கப்படுத்தினர்.

படம் ரிலீஸாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், 2020இல் நடைபெறவிருக்கும் IIFA விருது வழங்கும் விழாவில், தீபிகா படுகோன் விருது வழங்கப்பட்டு கௌரவப்படுத்தப்படுவார் என்று மத்திய பிரதேச ஆளும் காங்கிரஸ் கட்சியின் மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஷர்மா அறிவித்திருக்கிறார். “2000 முதல் நடைபெற்று வரும் IIFA நிகழ்ச்சியின் இருபதாவது ஆண்டு விழா இந்த வருடமும் கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் செலவில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். கிட்டத்தட்ட 90 நாடுகளில் நேரலை செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த நகர்வு, சப்பாக் திரைப்படத்தினை புரமோட் செய்வதற்காக என்று சொல்லப்பட்டாலும், அவர்களது ஆதரவாளர்கள் இது பா.ஜ.க-வுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவாகவே பார்க்கிறார்கள். தொடர்ந்து நடைபெறும் பிரச்சினைகளிலும், பாராட்டுகளிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல் அமைதியாகவே இருக்கிறார் தீபிகா.

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon