மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

“சுட்டவனும், சுடப்பட்டவனும் குடிமகன்” :லாபம் சொல்லும் கதை!

 “சுட்டவனும், சுடப்பட்டவனும் குடிமகன்” :லாபம் சொல்லும் கதை!

ஜனரஞ்சக இயக்குநர் என்று அனைவராலும் பாராட்டப்படும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் லாபம். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், நேற்று(11.01.2020) நடைபெற்ற விகடன் விருது விழாவில் வெளியிடப்பட்டது.

ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம். அதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியும், ஜனநாதன் அவர்களும் இணையும் திரைப்படம் என்பதால் இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதிலும், ஹிப்பி கேரக்டர் போல விஜய் சேதுபதியின் ஹேர்ஸ்டைல் அமைந்த சில படங்கள் வெளியானதால் இந்தப் படத்தின் தன்மை குறித்து புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தனர் ரசிகர்கள். இவையனைத்தையும் ஒரே போஸ்டரில் மாற்றி, ‘என்ன சொல்லப்போகிறார் ஜனநாதன்’ என சீட்டின் நுனியில் வந்து அமரும் அளவுக்கான வேலைகளை அதில் செய்திருக்கிறார்.

‘குடிமக்களே’ என ஒலிபெருக்கியில் விஜய் சேதுபதி பேசுவது போன்ற படமும், அவருக்குப் பின்னால் விவசாயக் குடும்பம் ஒன்று போராட்டத்துக்குச் செல்வது போலவும் அவர்களை போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சிப்பது போலவும் இரு காட்சிகள் அமைந்துள்ளன. மேலும், போலீஸை நோக்கி ஒரு பெண் தைரியமாக நடந்து செல்லும் காட்சியும் அதில் இடம்பெற்றிருக்கிறது.

போஸ்டர் ரிலீஸானதிலிருந்து அதனைப் பகிர்ந்துவரும் ரசிகர்கள், ‘இது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய படமா?” என்று விவாதித்து வருகின்றனர். படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது டிரெய்லர் ரிலீஸாகும் வரை காத்திருக்கவேண்டும். விழா மேடையில் பேசிய இயக்குநர் ஜனநாதன் “சுட்டவனும் குடிமகன் தான், சுடப்பட்டவனும் குடிமகன் தான்’ என்று கூறினார்.  

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon