நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதம், தற்போது 2 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5-ஜி தொழில் நுட்பம் அமலுக்கு வருவதற்கு முன்பு “அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டால் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு அபாயம் ஏற்படும். இதனால் அத்திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று சொல்லி நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்ட பலர் கடந்த ஜூன் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இது முற்றிலும் தவறான தகவல். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். வெறும் பெயருக்காகவும், புகழுக்காகவும்தான் இந்த வழக்கினை மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்ந்த நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த வழக்கில் நடிகை ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கினை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக விசாரித்த நீதிபதி, “இந்த 5-ஜி தொழில் நுட்பம் அற்பமான விஷயம் இல்லை. சாதாரணமான முறையில் இதனை உருவாக்கவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தி ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை 2 லட்சம் ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பினை கேட்டு மகிழ்ச்சியடைந்த நடிகை ஜூஹி சாவ்லா இது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். தனக்கான அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டதால் நீதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜூஹி சாவ்லா கூறியுள்ளதாவது: முதல் தீர்ப்பு வந்தபோதே அதை எதிர்த்து அப்பீல் செய்யும்படி எனது குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். காற்றில் இருக்கும் மின் காந்த அலைகளைப் பற்றி நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்தே படித்து வருகிறேன்.
என்னுடைய பின்னணி மற்றும் என்னுடைய சமூக சேவைகள் எதையுமே நீதிமன்றம் முதலில் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. புறக்கணித்தது. இதனை சாதாரண ஒன்றாகவே அனைவரும் கருதினார்கள். பத்திரிகைகள் இதனை முக்கியப் பிரச்சினையாக உருமாற்றிக் காண்பித்தமைக்கு எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.
**-அம்பலவாணன்**
�,