தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்த் திரையுலகின் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, டிஜிட்டல் (VPF) கட்டணம், OTTயில் திரைப்படங்கள் வெளிவருவது, தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (FEFSI) படப்பிடிப்பு சம்பந்தமான பிரச்சினை மற்றும் சினிமாத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை (மார்ச் 18) மாலை 5.30 மணிக்கு சங்க அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு சங்க உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது
ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்கிற பழமொழிக்கு ஏற்ப கூத்தாடிகளை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பல்வேறு அமைப்புகளாக தமிழ் சினிமாவில் பிரிந்து உள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதால் படம் தயாரிக்க கூடிய, வசதிபடைத்த, பைனான்சியர்கள் ஆதரவு உள்ள தயாரிப்பாளர்கள் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கி 65 தயாரிப்பாளர்களை உறுப்பினராகக் கொண்டு இயங்கி வருகின்றனர்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியை தழுவியதால் ‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பில் நிர்வாகிகளாக இருந்த பொருளாளர் கே.ராஜன் மற்றும் போஸ், அசோக் சாம்ராட் ஆகியோர் பிரிந்து இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என கூறி ராஜினாமா செய்வதாக அறிவித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து விட்டனர்
பிற அமைப்புகள் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து பேசி, ஒப்புதல் பெற்றே இயங்கி வருகின்றன பாரதிராஜா தலைமையில் உள்ள நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இதுபோன்ற நடைமுறையைக் கடைப்பிடிக்காததால் எந்த ஒரு முடிவையும் கறாராக நடைமுறைப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளால் இயலவில்லை.
அதன் காரணமாக VPF கட்டணம் ரத்து, பெப்சி தொழிலாளர்கள் சம்பளப் பிரச்சினை, நடிகர்கள் சம்பளம் குறைப்பு சம்பந்தமாக உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தால் VPF கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த சூழலில் பாரதிராஜா தலைமையிலான சங்கம் 40% தள்ளுபடியில் கட்டணம் செலுத்த ஒப்புதல் வழங்கியது.
தயாரிப்பாளர்கள் இடையே ஒற்றுமையின்மையால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பைனான்சியர்கள், நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
65 தயாரிப்பாளர்களின் நலனுக்காக 1000 தயாரிப்பாளர்கள் வாழ்வாதாரத்தை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பலி கொடுத்துவருகிறது என்கிறார் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவுகளைக் கைவிடவும், கட்டுப்படுத்தவும் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்ற மூத்த தயாரிப்பாளர்கள் கொண்ட குழு அமைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள சங்க உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஒப்புதல் பெற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்கின்றனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு சங்கம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதனை கடுமையாக கண்டித்து, எச்சரித்து பாரதிராஜா கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தச் சூழலில் வரும் 18.03.2021இல் நடைபெறவுள்ள கூட்டத்தில் சங்க கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பெற இருப்பதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத் தகவல். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையில் யார் பெரியவன், அதிகாரம் மிக்கவன் என்கிற போட்டி தமிழ் சினிமாவில் எழுந்திருக்கிறது.
**-இராமானுஜம்**
�,