pரொனால்டினோவை சிறையில் தள்ளிய அன்பளிப்பு?

Published On:

| By Balaji

உலக ஃபுட்பால் வரலாற்றில் ‘ரொனால்டினோ’ பெயரைக் குறிப்பிடாமல் எழுதிவிட முடியாது. அட்டாக்கர், டிஃபண்டர், மிட்ஃபீல்டர் என ஃபுட்பாலின் எந்தப் பிரிவை எடுத்தாலும், அதனை மேம்படுத்தியதிலோ அல்லது சிதறடித்ததிலோ ரொனால்டினோவின் பெயர் இடம்பெற்றுவிடும். அப்படிப்பட்ட ரொனால்டினோ இன்று பராகுவே சிறையில் இருக்கிறார்.

பராகுவே நாட்டில் நடைபெறவிருந்த குழந்தைகளுக்கான ஃபுட்பால் கிளப் ஒன்றின் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்த ரொனால்டினோவுக்கு அவரது தம்பி ராபர்டோ டி அசிஸ் துணையாக வந்திருக்க, அவர்கள் இருவரும் அசன்ஸியோ நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அங்கு திடீரென போலீஸ் ரெய்டு நடைபெற்றபோது, ரொனால்டினோ மற்றும் அவரது தம்பி ஆகியோரின் ஆவணங்களை பரிசோதித்தனர். அப்போது கொடுக்கப்பட்ட பாஸ்ட்போர்ட்டில் ரொனால்டினோ மற்றும் ராபர்டோ ஆகிய இருவரும் பராகுவேவின் குடிமகன்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரேசில் நாட்டுக்காக கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ கண்டிப்பாக பராகுவேவின் குடிமகனாக இருக்கமுடியாது எனக் காவலர்களுக்குத் தெரிந்திருந்ததாலும், சமீபத்திய ரொனால்டினோ பற்றிய தலைப்புச் செய்திகளை அறிந்திருந்ததாலும் உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் பராகுவே காவல் துறையினர்.

**ரொனால்டினோ ஏன் பராகுவே குடிமகனாக இருக்கமுடியாது?**

ரொனால்டினோ கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தொடர்ந்து பல தொழில்களிலும் கால்பந்தாட்ட கிளப்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவரது வாழ்க்கைக் கதையை புத்தகமாக எழுதி, உலகச் சுற்றுப்பயணம் செய்து அதன் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்காகவே ரொனால்டினோ பராகுவே நாட்டிற்கு வந்திருந்தார். ஆனால், ரொனால்டினோ வரும் செய்திக்கு முன்னரே அவருக்கு ‘வெளிநாடுகளுக்குச் செல்ல தடை’ விதிக்கப்பட்ட செய்தி பராகுவே நாட்டை அடைந்திருந்தது.

**வெளிநாடுகளுக்குச் செல்ல ரொனால்டினோவுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?**

2015ஆம் ஆண்டு ரொனால்டினோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதற்குக் காரணம், பிரேசில் நாட்டின் மிகப்பெரிய குற்றம் ஒன்றில் அவர் ஈடுபட்டிருந்தது தான். பிரேசில் நாட்டின் டியோ கிராண்டே மாகாணத்தின் குவாய்பா நதிக்கரையில் ஒரு மீன் பண்ணையை ரொனால்டினோ உருவாக்கியிருந்தார். இதனை பரிசோதித்த ரியோ கிராண்டே அரசாங்கம் சரிவர அனுமதி பெறாமல் அந்தப் பண்ணை கட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ரொனால்டினோ மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதியானதால் 4 மில்லியன் யூரோக்களை அபராதமாக செலுத்த உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனால், ரொனால்டினோ தரப்பில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லப்பட்டது. உலகளவில் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஒருவரிடம் 4 மில்லியன் யூரோ பணம் இல்லை என்பது நம்பும்படி இருக்கிறதா? ஆனால், அதுவே உண்மையென நிரூபிக்கப்பட்டது.

ரியோ கிராண்டே நீதிமன்றம், ரொனால்டினோவின் வங்கிக் கணக்குகளை முடக்கி சோதித்துப் பார்த்ததில் அவரிடம் மொத்தமாக 6.59 அமெரிக்க டாலர்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. எனவே, விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தமுடியாததால், ரொனால்டினோவின் பாஸ்போரர்ட்டை முடக்கி வெளிநாடு செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ரொனால்டினோவின் தொடர் மேல்முறையீடுகளினால், அவரது பாஸ்போர்ட் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பிக் கொடுக்கப்பட்டாலும் அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

**செப்டம்பர் முதல் மார்ச் வரை 6 மாதங்கள் ஆகிவிட்டதே, பிறகு ஏன் கைது செய்யப்பட்டார்?**

ரொனால்டினோவின் பாஸ்போர்ட் அவரிடம் தான் இருக்கிறது. ஆனாலும், பராகுவே நாட்டிற்கு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்குக் காரணம், பராகுவே நாட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது அவரிடம் இருந்த பராகுவே குடிமகன் எனக் குறிப்பிடப்பட்டிருந்த இன்னொரு பாஸ்போர்ட். இது, ஏர்போர்ட்டில் இறங்கியதும், கால்பந்தாட்ட ஜாம்பாவானான நீங்கள் இனி பராகுவே நாட்டின் குடிமகன் என ரசிகர் ஒருவரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது என ரொனால்டினோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் ரொனால்டினோ மீது குற்றமே இல்லாமல் கைது செய்திருக்கின்றனர் என அவரது வக்கீல்கள் இப்போது முறையீடு செய்திருக்கின்றனர். ரொனால்டினோவிடம் இருந்த பாஸ்போர்ட் உண்மையாகவே அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதா அல்லது திட்டமிட்டு இதுபோல போலி ஆவணங்களை தயாரித்து பயணம் மேற்கொண்டார்களா என்பது குறித்து பராகுவே காவல் துறை விசாரணை நடத்திவருகிறது.

**-சிவா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share