உலகமெங்கும் கொரோனா பெரும் பாதிப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவருகிறது. சமீபகாலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை சுகாதாரத்துறைத் தெரிவித்து வந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்திருப்பதால் ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரியளவில் வெற்றியைப் பெற்றது. தற்பொழுது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வழக்கறிஞராக சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்தது. தொடர்ந்து, சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் இருக்கும் பாட்டி வீட்டில் இருப்பதால், அவர்களைச் சந்திக்க சென்றார் சூர்யா. அதன்பிறகு, விமானத்தில் நேற்று முன்தினம் சென்னைத் திரும்பியவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யாவுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம் சூர்யா. இந்நிலையில் தான், நேற்றிரவு சூர்யா இந்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். அந்த ட்விட்டில், “ ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று கூறியுள்ளார்.
இந்த கொரோனா தொற்றுக்கு பிரபலங்களும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகர் சரத்குமார், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ராஜமெளலி, ப்ருத்விராஜ், ராம் சரண் தேஜா உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதோடு, சூர்யாவின் தந்தையும், மூத்த நடிகருமான சிவகுமாருக்கு கடந்த வருட நவம்பர் இறுதியில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதும் நினைவுக்கூறத்தக்கது. இந்நிலையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், இணையத்தில் ##GetWellSoonSURIYAanna எனும் ஹேஷ்டேக் நேற்று இரவிலிருந்து டிரெண்டாகிவருகிறது.
கெட் வெல் சூர்யா!
**- ஆதினி**�,