இலங்கை தமிழனாக பிறந்தது தவறா? முத்தையா முரளிதரன்

Published On:

| By Balaji

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் 800 திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ‘இலங்கைத் தமிழர்கள் படுகொலையின்போது அதனை ஆதரித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என தமிழ் அமைப்புகள், திரையுலகிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.

இது விளையாட்டு சாதனைகள் பற்றிய படம்தான், இதில் அரசியலுக்கு இடமில்லை என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம்தான் இருக்கிறது. இந்த நிலையில் தன்னைப் பற்றி வெளியாகி வரும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக மூன்று பக்கம் அளவில் விரிவாக அறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 16) வெளியிட்டுள்ளார் முரளிதரன்.

“என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்” என்று குறிப்பிட்ட அவர்,

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக, எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள்தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால், போரால் நிகழும் இழுப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் 800″ என விளக்கம் அளித்தார்.

இது நாள்வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது என் வாழ்க்கை வரலாற்றுப் படமான “800” திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான விளக்கங்களை கூற விரும்புகிறேன் என்ற முரளிதரன்,

“இது, இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான். உதாரணமாக, நான் 2009ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019இல் கூறியதை, “தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்” என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில், எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளி காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது. ஒரு சராசரி மனிதனாக, பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த 10 வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதை மனதில் வைத்தே, “2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாள்” என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்” என்றும் கூறினார்.

அடுத்த எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறான செய்தி என்ற முத்தையா முரளிதரன், “என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனான நான், என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிகளே அதிகம்.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இவை அனைத்தையும் விடுத்து சிலர், அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது.எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப்பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில், நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

*எழில்*�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share