இயக்குநர் கௌதம் மேனனின் படங்கள் வரும்போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழும். அதிகம் படம் பார்க்காதவர்கள் கூட தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பார்கள். ஒருவேளை படம் அவுட் என்றால், கௌதம் மேனனை விமர்சிக்கவும் தயங்கமாட்டார்கள். இதற்குக் காரணம் கௌதம் மேனன் தொட்டுச் செல்லும் மனித உணர்வுகள். இதேபோன்றதொரு சூழலைத்தான் அவரது பிறந்தநாளும் உருவாக்கியது. கௌதம் மேனன் படங்களைப் பற்றி பலவாறு ஆதரித்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் பதில் கொடுத்துக்கொண்டிருந்தனர். அந்த புயலுக்கிடையே பூவினை வீசுவது போல, கௌதம் மேனனுக்கு தனது எமோஷனலான குறிப்பொன்றை வெளியிட்டிருக்கிறார் மேகா ஆகாஷ்.
“நாம் இருக்கும் தொழிலில், ஒரு திரைப்படம் முடிந்த பிறகும் ஒரு நட்புறவு தொடர்வது என்பது அரிதான விஷயம். ஆனால், நீங்கள் எப்போதுமே ஒரு வழிகாட்டியாக, ஒரு நண்பராக, என் குடும்பமாக எனக்காக எப்போதுமே இருந்திருக்கிறீர்கள். நன்றி கௌதம் மேனன். நீங்கள் மிகவும் ரியலான மனிதர். இது அரிதான ஒன்று” என்று அவரது பிறந்தநாள் வாழ்த்து ட்வீட்டில் கூறியிருக்கிறார்.
கௌதம் மேனன் எதிர்பார்த்த மாதிரியான வரவேற்பு எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திற்குக் கிடைக்கவில்லை. அதேமாதிரி, மேகா ஆகாஷுக்கான ஓப்பனிங்கும் இந்தத் திரைப்படத்தில் கிடைக்கவில்லை. எனவே, படத்தின் ரிலீஸுக்குப் பிறகும் மேகா ஆகாஷுடன் டச்சில் இருக்கும் கௌதம் மேனன் அடுத்த படத்தில் இவருடன் இணைவதாக முடிவெடுத்திருப்பதாலேயே மேகா ஆகாஷ் இவ்வளவு எமோஷனலான ட்வீட்டை வெளியிட்டிருக்கிறார் என்கின்றனர் திரையுலகினர். கௌதம் மேனன் எப்போதும் தனது திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுடன் இரண்டு முறை இணைந்து பணியாற்றுவார். ஒரு திரைப்படத்தில் எப்படி தன் ஹீரோயினை வெளிப்படுத்துகிறாரோ, அடுத்த படத்தின் முழுவதுமாக மாற்றிக்காட்டுவார். அதுபோலவே மேகாவுக்கு ஒரு சேஞ்ச் ஓவரைக் கொடுக்கப்போகிறார் கௌதம் என்கின்றனர்.
-**சிவா**�,