மத்திய அரசு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவைக் கடந்த 18-ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைத் தெரிவிக்க 2021 ஜூலை 2 வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது
மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டு விட்டால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் கூட அதன் அடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும்.
கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால், இந்த புதிய வரைவு, சில மாற்றங்களை முன்மொழியும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக, இந்தப் புதிய சட்டத்தின், பிரிவு 5பி(1)-ன் படி திரைப்படங்களுக்குச் சான்றளிக்கும் தணிக்கை வழிகாட்டுதலுக்கான கொள்கைகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், மத்திய அரசு அதனைத் திருத்துவதற்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற முன்மொழிவைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களின் சான்றுகளைத் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தங்கள் தீர்ப்புகள் மூலம் முந்தைய காலங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறது.
தற்போது திரைப்படங்கள் U,U/A மற்றும் A என்று பிரிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் U சான்றிதழ் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம். U/A சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். A சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.
இதில், U/A சான்றிதழை, வயது வாரியாக பகுப்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, U/A 7+, A/A13+ மற்றும் U/A 16+ என்று பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓ.டி.டி., தளங்களில் திரைப்படங்களும், வலைதள தொடர்களும் அதிகமான பின், இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே, U/A சான்றிதழ் மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது
இரண்டாவது திருத்தம், நேரடியாக சினிமா திருட்டு சம்பந்தப்பட்டது. இதற்காக, 6AA என்ற தனிப்பிரிவு இணைக்கப்பட உள்ளது. அதன்படி, எந்த வகையிலும், எந்த இடத்திலிருந்தும், படத்தின் இயக்குநரது எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி, படத்தின் ஒரு சில பகுதிகளோ, முழு படமோ, ஒலி – ஒளிப்பதிவு செய்யப்படக் கூடாது. அப்படிச் செய்யப்பட்டால், மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்த தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.
மூன்றாவது திருத்தம், தணிக்கை சான்றிதழின் காலம் தொடர்பானது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ், 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதைக் காலம் முழுவதும் செல்லுபடியாகும் சான்றிதழாக வழங்குவதற்கான திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான நான்காவது திருத்தம் தான், திரைக் கலைஞர்கள் படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு திரைப்படத்துக்கு, தணிக்கை குழு சான்றளித்து, திரையரங்குகளுக்கு வந்த பின், அதை மத்திய அரசு திருத்த முடியாது.
அதற்கான அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை என்று, ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஒரு புதிய திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ, பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ, அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவைப் பாதிக்கும் விதமாக. பொது அமைதி, கண்ணியம், அறநெறியைக் குலைக்கும் விதமாகவோ; நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் விதமாகவோ உள்ளடக்கம் இருப்பதாகப் புகார் வருமானால், திரையரங்கத்தில் வெளியாகி இருந்தாலும், அந்த சினிமாவை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழு தலைவருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலாம், ஆணை பிறப்பிக்க இந்த திருத்தம் வகை செய்கிறது.
இந்த திருத்தத்தின் படி, மத்திய அரசு, சூப்பர் சென்சாராக மாற முயற்சி செய்கிறது என்ற, விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு எதிராக இந்தி திரைக்கலைஞர்கள் அனுராக் காஷ்யப், நடிகை நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் ஆகியோருடன் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட 1400 திரைக்கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஏற்கனவே திரைக் கலைஞர்கள் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் சூழலில் இந்த புதிய சட்டத் திருத்த வரைவு அதனை இன்னும் வலுவாக்கும் என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது, கருத்துச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயல் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். திருட்டுத்தனமாகவும், கள்ளத்தனமாகவும் திரைப்படங்களை வெளியிடுவதால், திரையுலகிற்கும் அரசாங்கத்திற்கும் பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தம் கொண்டுவர மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.ஆனால், மத்தியில் பொறுப்புக்கு வரும் எந்த அரசும் தாங்கள் மக்கள் மீது திணிக்க விரும்புவதை மட்டுமே திரைத்துறை மூலம் நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கக் கூடும் என்றும் படைப்பாளிகள் பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். படைப்பு சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் திருத்தங்களுக்கு எதிராக தேசிய அளவில் திரைத்துறையினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் படத்தயாரிப்பு, முதலீடு செய்வதில் இந்திய திரைப்படத் துறையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ் திரைப்பட துறை கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த சட்டம் பற்றிய புரிதல் இல்லை என்கின்றனர் பிற மொழி கலைஞர்கள்.
தமிழ்சினிமாவில் திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்தை எதிர்த்து, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என, நடிகர் கமல், டுவிட்டர் பக்கத்தில் எழுதினார். கூடவே, கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும், மூன்று குரங்கு சின்னங்களாக, ஒருபோதும் சினிமா, மீடியா மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால், அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் என்றும், குறிப்பிட்டு இருந்தார்.
நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது…
“சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக… அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல… இன்று தான் கடைசி நாள். உங்கள் ஆட்சேபனையைத் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.
கருத்துரிமைக்கு எதிரானது என அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ஆளும் அரசுகள் செய்யும் ஊழல், அரசியல்வாதிகளின் கதைக்கருவாக கொண்டு படங்களை இயக்கும், தயாரிக்கக் கூடிய தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து இந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழ் சினிமாவில் சின்ன சத்தம்கூட எழவில்லை. திரைப்படங்களில் அட்டை கத்திகள் ஏந்தி, வசனகர்த்தாவின் வசனங்களைப் பேசி வீர சமர்புரியும் நாயகர்களாக ரசிகர்களால் ஆராதிக்கப்படும் சூப்பர் ஸ்டார், தளபதி, தல நடிகர்கள் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
1950கள் தொடங்கி சமூக மறுமலர்ச்சி, அரசியல் மாற்றம், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, மதவெறி, சாதிவெறிகளுக்கு எதிரான போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வந்த தமிழ் திரையுலகம் தன் படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்டத்திற்கு எதிராக மெளனம் சாதித்து வருகிறது. இதற்குக் காரணம் திரைப்பட சங்கங்களில் ஆளுமையாக்கத் தலைவர்கள் இல்லாததும் ஒரு காரணம் என்கின்றனர்.
வழக்கம்போல கமல்ஹாசன், சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்கள் மட்டுமே கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான சட்டத்தை விமர்சித்தும், எதிர்த்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
**-இராமானுஜம்**
�,