பிக் பாஸ் பிரபலம் கவின் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்தவர் நடிகர் கவின். அதன் மூலம் திரைப்பட வாய்ப்பை பெற்ற அவர் நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு அதன் மூலம் பெரும் ரசிகர்களை சம்பாதித்தார். அந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் கவினுக்கு அதிக பிரபலத்தைத் தேடித் தந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின், திரைப்படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் கவின் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மார்ச் 13) வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தில் நடித்த அமிர்தா ஐயர் கவினுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப்படத்திற்கு ‘லிப்ட்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் பெயரைப் போன்றே, லிஃப்டை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது போஸ்டர் மூலம் தெரிகிறது. போஸ்டரில் லிஃப்ட்டுக்குள் சிக்கிக் கொண்ட கவினும், அமிர்தாவும் சோகமாகக் காணப்படுகின்றனர். லிஃப்ட் முழுவதும் ரத்தக்கறை படிந்து காணப்படுகிறது. கவினுக்கு அருகே வாக்கி டாக்கி ஒன்றும் உள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை வினித் வரபிரசாத் இயக்கியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”